ரஷ்யா – உக்ரைனின் ஏழுமாதமாகத் தொடரும் போரை நாம் அறிவோம். ஆனால் உலகில் மற்றொரு போர் மூளும் அபாயம் நடந்துகொண்டிருக்கிறது, அஸர்பைஜான் – ஆர்மீனியாவின் எல்லை மோதலில் வெடிக்கும் கலவரத்தால் உண்டான அபாயம் தான் இது. ஒரு பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கான இரு நாடுகளின் மோதலில் நூற்றுக்குக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.
ஏன் கலவரம்?
அஸர்பைஜான் – ஆர்மீனியாவின் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இவர்களுக்குச் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த சண்டை துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்குச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, பீரங்கிகளை எடுத்துக்கொண்டு இரு நாடுகளும் அவர்களின் எல்லையில் தாக்கிக்கொண்டு நிற்கிறார்கள்.
போரின் பின்னணி என்ன?
சோவியத் யூனியன் உடைந்தபோது, இந்த அஸர்பைஜான் – ஆர்மீனியாவும் தனியான குடியரசு நாடுகளானது. ஆனால் சோவியத் யூனியனுடன் ஒன்றாக இருந்தபோதே அஸர்பைஜான் – ஆர்மீனியாவும் மோதிக்கொண்டு தான் இருந்தன.
அந்த மோதலுக்குக் காரணம், ஒரு மலைப் பகுதி தான். நார்கோனா- காராபாக் என்ற பிராந்தியம் தான் இந்த இரு நாடுகளையும் பிரிக்கும் எல்லைப் பகுதி. இந்த பிராந்தியம் யாருக்குச் சொந்தம் என்பது தற்போது வரை நீடிக்கும் கலவரத்துக்கான பின்னணி.
1988 போர் - இந்த மலைப்பகுதிக்கான முதல் போர் 1988-ல் நடந்தது. இந்த போர் ஆறு ஆண்டுகள் நீடித்தது. போரின் முடிவில் நாகோர்னா- காராபாக் மலைப் பகுதி அஸர்பைஜானுக்கு சொந்தமானது என அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அந்த அங்கீகரிக்கப்பட்ட பகுதியில், ஆர்மீனிய பழங்குடிகள் அதிகம் வாழ்கிறார்கள் என்பதால் அந்த பகுதியை அஸர்பைஜான அரசால் சொந்தம் கொண்டாட முடியவில்லை.
2020 போர் – தொடர்ச்சியான கலவரங்களைத் தொடர்ந்து 2020ல் போர் உண்டானது. இந்த போரை ரஷ்யா தலையீட்டு செய்து சமரசம் பேசி ஒன்றரை மாதத்தில் முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த போரில் ஆர்மீனியா மக்கள் அதிகம் வாழும் மலைப்பகுதியை அஸர்பைஜான் கைப்பற்றியது.
ஆர்மீனியாவில் கிறிஸ்தவர்கள் அதிக அளவிலும், அஸர்பைஜானில் இஸ்லாமியர்கள் அதிகமாகவும் வாழ்கிறார்கள். எண்ணெய் வளம் அஸர்பைஜானில் உள்ளது. இதனால் ரஷ்யா அஸர்பைஜானுடன் நட்பு பாராட்டி வருகிறது. ஆனால் ஆர்மீனியாவில் ரஷ்யாவின் ராணுவ தளம் இருக்கிறது. இதனால் இரு நாடுகளும் ரஷ்யாவிற்கு முக்கியமான நாடுகள் என்பதால் , ரஷ்யாவிற்கு இவர்களின் மோதலில் என்ன செய்வதென்று புரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது.
மறுபக்கம், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுத உதவிகள் செய்து வருகிறது. உக்ரைனை வைத்து அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டச் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் ரஷ்யாவுக்கு அஸர்பைஜான் – ஆர்மீனியாவின் மோதல் தலைவலியாக மாறி உள்ளது. இருப்பினும் அஸர்பைஜான் – ஆர்மீனியா இடையில் தொடர்ந்து சமசரப் பேச்சு வார்த்தையை ரஷ்யா தொடங்கி உள்ளது.