பாகிஸ்தானில், 400 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க, குருநானக் அரண்மனையின் ஒரு பகுதியை சிலர் இடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின், பஞ்சாப் மாநிலம் நியூ லாகூர் சாலையில் உள்ள பத்தன்வாலா கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமையான, பாபா குருநானக் அரண்மனை உள்ளது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குர்நானக்கின் அரண்மனை என்பதால் இந்த அரண்மனையை, உலக நாடுகளில் வாழும் சீக்கியர்கள் வந்து பார்த்துச் செல்வது உண்டு. குறிப்பாக இந்தியாவில் இருந்து அதிகமான சீக்கியர்கள் அங்கு செல்வார்கள்.
நான்கு மாடிகளைக் கொண்ட இந்த அரண்மனையில் 16 நீண்ட அறைகள் இருந்தன. வரலாற்று சிறப்புமிக்க இந்த அரண்மனையின் ஒரு பகுதியை, அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் சமீபத்தில் இடித்துள்ளனர். அங்கிருந்த விலைமதிப்பற்ற மரக்கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றைப் பெயர்த்து விற்றுள்ளனர்.
‘’இந்த பழமையான அரண்மனையை மஹாலன் என்ற பெயரில் நாங்கள் அழைப்போம். உலகம் முழுவதும் இருந்து சீக்கியர்கள் இதை வந்து பார்வையிட்டுச் செல்வார்கள். இந்த கட்டிடத்தை செல்வாக்குள்ள நபர்கள் சிலர் இடிப்பது பற்றி அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை. யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பாகிஸ்தானின் மத விவகாரத்துறையும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.