ஜப்பானின் ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதின் 77வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த 'பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது. 4 சதுர மைல் சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. இதில் 1.40 லட்சம் பேர் உயிரிழந்தனர். கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். ஆகஸ்ட் 9ல் நாகசாகி மீது அடுத்த அணுகுண்டை வீசியது.
இந்த நிலையில், ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதலின் 77வது நினைவு தினமான இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் நடந்த நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய குட்டெரெஸ், ''அணுசக்தி பேரழிவுக்கான சாத்தியக்கூறுகள் உலகம் முழுவதும் பெருகி வருகிறது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் கொரிய தீபகற்பம் ஆகியவை பேரழிவுக்குள்ளாகும் அபாயத்தில் உள்ளன'' என்றார்.
இதையும் படிக்க: பிரமாண்ட விமான நிலையம் அமைக்க தயாராகிறாரா எலான் மஸ்க்? அவரே கொடுத்த விளக்கம்!