இந்து சிறுமிகள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் விருப்பப்படி கணவர்களுடன் வாழலாம் என்று பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ரீனா (15), ரவீனா (13) ஆகிய சிறுமிகளை கடத்தி, இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோலி பண்டிகையின் போது அவர்களைக் கடத்திய கும்பல், திருமணம் செய்து மதமாற்றம் செய்துள்ளனர் என பெண்களின் பெற்றோர் புகார் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக, உரிய விளக்கமளிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானில் உள்ள இந்திய அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் இந்து சேவா அமைப்புத் தலைவர் சஞ்ஜேஷ் தான்ஜா, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறிய வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந் நிலையில், அந்தப் பெண்கள் தங்களை யாரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றவில்லை. சுய விருப்பத்தின் பேரிலேயே திருமணம் செய்து கொண்டோம் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இதை விசாரிப்பதற்காக, தலைமை நீதிபதி அதார் மினல்லா தலைமையில் ஐந்து பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரித்து, இந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தங்கள் விருப்பப்படி கணவர்களுடன் வாழ லாம் என்றும் நேற்று தீர்ப்பளித்தனர்.