இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி எல்லையோரப் பகுதிகளில் சீனா மீண்டும் படைகளை குவிப்பது அம்பலமாகியுள்ளது.
கடந்த ஆண்டு லடாக் பகுதியில் அத்துமீற முயன்ற சீன படையினரை இந்திய ராணுவத்தினர் தடுத்ததால் மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றமான சூழல் உருவான நிலையில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் ஏற்பட்டது. அப்போது, எல்லையோர பகுதியில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் 17 மாதங்களுக்குப் பிறகு, இந்திய எல்லையையொட்டியுள்ள சீன பகுதிகளில் வீரர்கள் தங்குவதற்கான கட்டமைப்புகளை அந்நாட்டு ராணுவம் உருவாக்கி வருவது தெரியவந்துள்ளது. மேலும் எல்லையொட்டிய பகுதிகளில் விமானங்கள் தரையிறங்குவதற்கான கட்டமைப்புகளை அதிகரிக்கவும் சீன ராணுவம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.