ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளப் பெருக்கு காரணமாக துபாயின் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள காட்சிகளை காணமுடிகிறது.
அபுதாபி ஷார்ஜாவிலும் கனமழையால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பலத்த காற்று மற்றும் மழையால் உலகின் மிக முக்கியமான விமான நிலையமான துபாய் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமான நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
துபாயில் மெட்ரோ சேவையும் பாதிக்கப்பட்டது. புயல் மழையக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு நாடுகளின் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அரசு ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்தவாறு பணிகளை மேற்கொண்டனர்.
அதேபோல், அண்டை நாடான ஓமனில் கனமழை வெள்ளத்திற்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து பள்ளிக்குழந்தைகள் பயணித்த வேன் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் அனைவரும் உயிரிழந்த சோகமும் ஓமனை துயரக்கடலில் ஆழ்த்தியுள்ளது.