வடக்கு அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. இதன் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட வெப்பம் சார்ந்த நோய் அறிகுறிகளுடன் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மெக்ஸிகோ நாட்டு சுகாதாரத் துறைச் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவிவரும் கடும் வெயில் காரணமாக கடந்த 3 மாதங்களில் 112 போ் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நாட்டின் சில பகுதிகளில் கொளுத்தும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக கடந்த மாா்ச் மாதத்திலிருந்து இதுவரை 112 போ் உயிரிழந்துள்ளனா்.
அதிகபட்சமாக, நியூவோ லியான் மாகாணத்தில் வெயிலுக்கு 64 போ் உயிரிழந்திருக்கின்றனர். இதுதவிர, டமாலிபஸ், வெராக்ரஸ், டபாஸ்கோ உள்ளிட்ட 7 மாகாணங்களில் அதிக வெப்பம் காரணமாக பலர் உயிரிழந்தனா். இவர்களில் பெரும்பாலானோர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், ஒருசிலர் நீரிழப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
வெப்ப அலை தொடா்பான உடல்நலக் குறைபாடுகளுக்காக 1,559 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த நிலை தொடரும் என்பதால், மக்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மெக்ஸிகோவில் கடந்த 10 நாள்களாக வெப்பநிலை இதுவரை இல்லாத அதிகபட்சமாக 113 டிகிரியை தொட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் மெக்ஸிகோவில் கடும் வெப்பம் உணரப்படுவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்தனர்.