இலங்கையில் நடைபெறும் பெரஹரா விழாவிற்கு கொண்டுவரப்பட்ட மெலிந்த யானையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் ஆண்டு தோறும் பெரஹரா திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் பெரஹரா திருவிழா இந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் 50-க்கும் அதிகமான யானைகள் பங்கேற்றுள்ளன. மேலும் 2000-க்கும் மேற்பட்ட கலைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இத்திருவிழாவில் கண்டியில் உள்ள புத்தரின் பாதுகாக்கப்பட்ட புனிதப் பல் யானைகள் குடை சூழ ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். மின் விளக்குகளால் ஒளிரும் கட்டடங்கள், இசைக்கு ஏற்றபடி நடனமாடும் கலைஞர்கள், ஆடி அசைந்துவரும் அலங்கரிக்கப்பட்ட யானைகள் என இலங்கையில் வருடந்தோறும் நடைபெற்று வரும் பாரம்பரிய மிக்க புத்த சமய திருவிழாதான் ‘பெரஹரா’.
இந்நிலையில், தாய்லாந்தைச் சேர்ந்த ‘சேவ் எலிபென்ட்ஸ் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு பெரஹரா விழாவில் யானைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. உலக யானைகள் தினமான ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியிட்ட அந்தப் பதிவில் டிக்கிரி என்ற உடல் மெலிந்த நிலையில் எலும்பும் தோலுமாக மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ள பெண் யானை ஒன்றின் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டது.
இது குறித்த பேஸ்புக் பதிவில் அந்த அமைப்பு, ‘‘70 வயது டிக்கிரி என்ற பெண் யானை 10 நாட்கள் நடக்கும் பெரஹரா விழாவில் வலுக்கட்டயாமாக அழைத்து வரப்பட்டு கலந்துகொள்ள வைக்கப்பட்டுள்ளது. இந்த யானை தினமும் மாலை பல கிலோ மீட்டர்கள் நடக்கவும் வலுக்கட்டாயமாக மக்களை ஆசிர்வதிக்கவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. யானையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் உடைகளின் மூலமாக அதன் பலவீனமான உடல்நிலை தெரியவில்லை. மேலும் அதிக ஒளியால் டிக்கிரி கண்களில் இருந்து வரும் கண்ணீர் அது அணிந்திருக்கும் ஆபரணத்தின் மூலம் மறைக்கப்பட்டுள்ளது.
விழா என்ற வகையில் அதனை நடத்துபவர்கள் தங்களது நம்பிக்கைகளை வெளிப்படுத்த எல்லா உரிமைகளும் உள்ளது. இருப்பினும், மற்றொரு உயிர் பாதிக்கப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?. உயிரினங்கள் பாதிக்கப்பட வைத்துவிட்டு, இதனை எப்படி ஆசிர்வாதம் என்றோ அல்லது புனிதமானது என்றோ சொல்ல முடியும்?
இன்று உலக யானைகள் தினம். இந்த புகைப்படம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக நாம் நினைத்தால், யானைகளுக்கு அமைதியான உலகை நம்மால் கொடுக்க முடியாது. அன்பு செய்வது, எந்த உயிருக்கும் தீங்கும் செய்யாதது, இரக்கம் காட்டுவது. இவைகள்தான் புத்த மதத்திற்கான வழி. அதனை நாம் கடைபிடிக்க வேண்டிய நேரம் இது” என உருக்கமாக கூறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் அனைவரும் முறையிட வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொள்வதற்கான விவரத்தையும் பதிவிட்டுள்ளது.
இந்தப் பதிவை கடந்த இரண்டு நாட்களாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விழாவை நடத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். யானையின் நிலையை கண்டு தங்களுக்கு ஏற்பட்ட மன வருத்தத்தையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டிக்கிரி யானை குறித்து பேசியுள்ள கோயில் செய்தித்தொடர்பாளர் “நாங்கள் எப்போதும் விலங்குகளைப் பற்றி அக்கறை கொண்டுள்ளோம். டிக்கிரியை மருத்துவர்கள் கவனித்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.