ஈன்றெடுத்த தாயிடம் இருந்து பிரிந்துச் சென்ற குழந்தை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது பெற்றோரிடம் சேருவது குறித்த படங்கள் பல வந்திருப்பதை அறிந்திருப்போம். சமூக வலைதளங்கள் வாயிலாக சிலர் தங்களது பிள்ளைகளையும், பெற்றோரையும் கண்டறிந்தது குறித்த செய்திகளையும் கடந்து வந்திருப்போம்.
ஆனால், இறந்ததாக கூறப்பட்ட மகனை 17 ஆண்டுகள் கழித்து உயிரோடு கண்டறிந்த சுவாரஸ்யமான அதிர்ச்சியான சம்பவம் ஒன்று சீனாவின் மாகாணத்தில் அண்மையில் நடந்திருக்கிறது. திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு இந்த சம்பவத்தின் பின்னணி இருந்திருக்கிறது என்பதுதான் கூடுதல் தகவலாக இருக்கிறது.
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த ஜாங் காய்ஹாங் என்ற பெண் தனக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக பல நாட்களாக எண்ணிக் கொண்டிருந்த வேளையில்தான் அண்மையில் தன்னுடைய மகன் இறக்கவில்லை என்றும் தனது உறவினரின் அண்ணியால் கடந்த 2005ம் ஆண்டு திருடப்பட்டதையும் அறிந்திருக்கிறார்.
அதன்படி, ஜாங் கர்ப்பமாக இருந்த போது அவருடைய முன்னாள் கணவர் தன்னை கொடுமைப்படுத்துவார் என பயந்து உறவுக்காரனின் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார். அங்கு வசித்து வந்த நிலையில் ஜாங் காய்ஹாங்கிற்கு குழந்தை பிறந்திருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தையின் இரண்டு கால்களும் செயலிழந்துவிட்டது என ஜாங்கிடம் அந்த உறவுக்காரரின் அண்ணி கூறியிருக்கிறார். இதுபோக, குழந்தைக்கு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதால் விட்டுச் செல்லும்படி ஜாங்கை அந்த அண்ணி வற்புறுத்தியிருக்கிறார்.
சில நாட்களுக்கு பின்னர், ஜாங்கின் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக அந்த அண்ணி கூறியிருக்கிறார். இதனால் இத்தனை ஆண்டுகளாக தனக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவே ஜாங் காய்ஹாங் எண்ணி வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், தன்னுடைய உறவுக்காரரின் அண்ணி கூறியது அனைத்தும் பொய் என உணர்ந்தோடு தன்னுடைய மகன் இறக்கவில்லை என்றும் அவன் தற்போது பள்ளியில் படித்து வருவதையும் அறிந்திருக்கிறார்.
இதனையடுத்து தன்னுடைய மகனை கண்டறியும் பணியில் ஜாங் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்தான் தனக்கும் தன் மகனுக்குமான ஒற்றுமைகளை அறிந்ததோடு, தன்னுடைய முன்னாள் கணவரிடமும் இது குறித்து ஜாங் தெரிவித்திருக்கிறார். பிறகு, டி.என்.ஏ பரிசோதனை செய்ததில் அந்த உறவுக்காரரின் அண்ணியிடம் இருப்பது தன்னுடைய மகன் என உறுதிப்படுத்திக் கொண்ட ஜாங், தன் மகனை ஒப்படைக்கும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால் அந்த பெண்ணோ, இத்தனை ஆண்டுகளாக ஜாங்கின் மகனை தான் வளர்த்து வந்ததால் அதற்கான நஷ்டயீடை கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லும்படி கெடுபிடி காட்டியதோடு, ஜாங்கின் மகனை தன்னுடைய பாதுகாப்பில் அடைத்து வைத்திருக்கிறார். ஆனால் சட்டப்படி தத்தெடுத்து வளர்த்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் பணம் கொடுக்க முடியாது என ஜாங் மறுத்திருக்கிறார். தனது மகனை மீட்க போராடும் ஜாங் காய்ஹாங்கின் செயல்பாடு தற்போது சீன ஊடகங்களில் பெரும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.