குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மக்ரோனி மற்றும் பாலாடை கட்டிகளில் தடை செய்யப்பட்ட டாக்சிக் ஃபேதலேட் ரசாயனம் கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பாலாடைக்கட்டி மூலம் தயாரிக்கப்படும் 30 வகையான உணவு பொருட்களின் மீது நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. டாக்சிக் ஃபேதலேட் ரசாயனம் ஆண் வளர்ச்சிக்குரிய டெஸ்ட்டோஸ் டெரோன் எனப்படும் ஹார்மோனை பாதிக்கிறது. இது ஆண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பு வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்.
டாக்சிக் ஃபேதலேட் ரசாயன பொருள் கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ஆண் குழந்தைகளின் பிறப்பு உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மக்ரோனிலும் டாக்சிக் ஃபேதலேட் எனப்படும் ரசாயனம் கலக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் மக்ரோனி மற்றும் பாலாடை கட்டியையும் சேர்த்து குழந்தைகளுக்கு விருப்பமான உணவு தயாரிக்கப்படுகிறது. எனவே மக்ரோனி மற்றும் பாலாடைக் கட்டி உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என எச்சரித்துள்ளனர். இந்தத் தகவலை சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார வியூக மையம் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மைக் பெல்லிவே நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.