அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி டேவிட்சன்?

அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி டேவிட்சன்?
அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறதா ஹார்லி டேவிட்சன்?
Published on

ஐரோப்பிய யூனியனில் விற்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தியை வெளிநாடுகளில் மேற்கொள்ள ஹார்லி டேவிட்சன் நிறுவனம் முடிவு செய்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்த விசயத்தில் அவசரம் காட்டக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அமெரிக்க பொருள்களுக்கு ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள வரி குறித்துப் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ஐரோப்பிய யூனியனின் முடிவை மாற்ற அதிபர் ட்ரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அதில் விரைவில் வெற்றி கிடைக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். முன்னதாக ஐரோப்பிய யூனியனின் புதிய வரிவிதிப்பு அறிவிப்பினை அடுத்து ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது பெரும்பாலான தயாரிப்புப் பணிகளை அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளில் உள்ள தனது தொழிற்சாலைகளில் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியானது. 

டரம்ப், ஹார்லி டேவிட்சன் வாகனத்தை அமெரிக்காவின் ஒரு அடையாளமாக பார்க்கிறார். ஆகவேதான் அவர் அந்த நிறுவனத்தின் முடிவுக்கு உடனடியாக பதிலளித்திருக்கிறார். உலகம் முழுவதும் உள்ள வாகன பிரியர்களின் கவுரவமாக உயர்ந்து நிற்கிறது ஹார்லி டேவிட்சன். அதில் கடந்து செல்பவர்கள் பலர். ஆனால் ஹார்லி டேவிட்சன் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

அசுர வேகம், பிரமிக்கச் செய்யும் வடிவமைப்பு, சிங்கம் போன்ற தோற்றம், தடுமாறாத கட்டமைப்பு. HARELEY DAVIDSON STREET GLIDE. சாகசக்காரர்கள் அதிகம் விரும்பும் வாகனம். இந்தியாவில் இதன் விலை 30 லட்சம் ரூபாய். 1700 சிசி திறன் கொண்ட இந்த இரு சக்கர வாகனத்தில் சாதாரணமாக மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். யூஎஸ்பி, ப்ளூடூத், செல்போன்களுக்கான இணைப்பு என ஏராளமான வசதிகளைக் கொண்டது. கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் கோடிக்கணக்காவர்களை ஈர்த்த பைக் சாம்ராஜ்யத்தின் நவீன வடிவம் இது. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் வடிவமைப்பில் இதுபோன்ற பிரமிக்கச் செய்யும் பல இருசக்கர வாகனங்கள் வந்திருக்கின்றன. உலகில் பலர் இந்த வாகனங்களை வைத்திருப்பதையே பெருமையாகக் கருதுகிறார்கள். நெடுஞ்சாலைகளுக்கு ஏற்ற இந்த வாகனங்களை சாகசங்கள், உலகம் சுற்றுவது, பொழுதுபோக்குப் பயணம் போன்றவற்றுக்காகப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் பணக்கார்களுக்கான வாகனமாகக் கருதப்படும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளை பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். அதேநேரத்தில் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் மங்கோல்ஸ், BANDIDOS போன்ற சட்டவிரோதக் கும்பல்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களும் இவைதான்.

தற்போது உலகின் மிகப் பிரபலமான நிறுவனமாகத் திகழும் ஹார்லி டேவிட்சன் 1901-ஆம் ஆண்டிலேயே தனது முதல் இருசக்கர வாகனத்தை உருவாக்கி விட்டது. மிதிவண்டி போன்ற தோற்றமும் 116 சிசி திறனும் கொண்ட இந்த வாகனத்தை வில்லியம் எஸ். ஹார்லே, ஆர்தர் டேவிட்சன் ஆகிய இரு அமெரிக்கர்கள் சேர்ந்து உருவாக்கினர். இரண்டே ஆண்டுகளில் 405 சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட அதிவேக இருசக்கர வாகனம் உருவானது. இவற்றைக் கொண்டு அந்தக் காலத்திலேயே சுமார் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடிந்தது. அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்த இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனத்துடனான போட்டி காரணமாக மாறுபட்ட வடிவங்களையும் கவர்ச்சியான வசதிகளையும் கொண்ட வாகனங்களை ஹார்லே டேவிட்சன் நிறுவனம் உருவாக்கியது. 1917-ஆம் ஆண்டில் முதல் உலகப் போரில் அமெரிக்கா பங்கேற்றபோது ராணுவ வீரர்களுக்கு ஹார்லி டேவிட்சன் வாகனங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஹார்லி டேவிட்சனுடன் 15 ஆயிரம் இருசக்கர வாகனங்களை வாங்குவதற்காக அமெரிக்க அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. முதல்முதலாக ஒரு போரில் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டது அப்போதுதான். ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் திறனுக்கும் பெருமைக்கும் வரலாறு வைத்திருக்கும் சாட்சியங்கள் அவை.

1920-களிலேயே ஆயிரம் சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை ஹார்லி டேவிட்சன் அறிமுகப்படுத்தியது. முதல் உலகப் போருக்கும் இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்ட காலத்தில் தப்பிப் பிழைத்த ஒரே மோட்டார் சைக்கிள் நிறுவனம் என்ற பெருமை ஹார்லி டேவிட்சனுக்கு உண்டு. சந்தையில் தங்களது இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இரண்டாம் உலகப் போரில் சுமார் 90 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்து அமெரிக்கா மற்றும் கனடா ராணுவத்துக் வழங்கியது ஹார்லி-டேவிட்சன். இதுபோன்ற சாதனைகள்தான் ஹார்லி டேவிட்சன் வாகனங்களை வைத்திருப்போரின் பெருமிதத்துக்குக் காரணங்கள்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் சாதாரணமான பைக்கின் விலையே ஐந்து லட்சம் ரூபாய். சிறப்பு வசதிகள் வேண்டுமென்றால் மேலும் சில லட்சங்களைச் செலவு செய்ய வேண்டும்.Touring, Softail, Dyna, Sportster, Vrod , Street என ஆறு வகையான பிரிவுகளில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான எஞ்சின்களையும் சஸ்பென்சன் வசதிகளையும் கொண்டிருக்கும். இவை தவிர குறைந்த எண்ணிக்கையிலான limited - Edition மாடல்களையும் 1999-ஆம் ஆண்டில் இருந்து ஹார்லி டேவிட்சன் வெளியிட்டு வருகிறது. அண்மைய மதிப்பீட்டன்படி இந்த நிறுவனத்தின் பைக்குகளை வைத்திருப்போரின் சராசரி வருமானம் ஆண்டுக்கு சுமார் 50 லட்சம் ரூபாய்.

ஹார்லி டேவிட்சன் பைக்குகளைத் தவிர, தாங்களாகவே வடிவமைத்துக் கொள்ளும் பைக்குகளும் சாகச பைக்குகளை விரும்புவோரின் விருப்பமாக இருக்கிறது. இவர்கள் நிறுவனங்களின் பைக்குகளை வாங்கி அதில் மாற்றங்களைச் செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு பகுதியையும் புதிதாகவே தயாரிக்கிறார்கள். இதுபோன்ற பைக்குகள் Choppers என்று அழைக்கப்படுகின்றன. இதற்காகவே பிரத்யேகமான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதுபோன்ற சாப்பர் பைக்கை தயாரிப்பதற்கு பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள்வரைகூட ஆகக்கூடும். ஆனாலும் தங்களுக்குப் பிடித்தமான வடிவமைப்பில் இருசக்கர வாகனங்களை வைத்திருக்க விரும்புவோர் இந்தக் காலதாமதத்தை பொருட்படுத்துவதில்லை.

பல லட்சம் ரூபாய் செலவில் ஒரு மோட்டார் சைக்கிளை வாங்குவதா? ஆபத்தான வேகத்தில் சாலைகளில் செல்வதா? விதிமுறைகளை மதிக்கும் பொறுப்பு வேண்டாமா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்போருக்கும் ஹேர்லி டேவிட்சன் போன்ற சாகச பைக்குகளை வாங்க விரும்புவோருக்கும் உள்ள இடைவெளி சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மிகமிக அதிகம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com