ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 39வது நாளாக போர் நடந்து வருகிறது. இதில் காஸாவைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குறிப்பாக காஸாவின் மருத்துவமனைகள், தேவாலயங்கள், அகதிகள் முகாம்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து இஸ்ரேல் கோர தாக்குதலை தொடுத்து வருகிறது.
இதற்கிடையே, மனிதாபிமான உதவிகளுக்காக தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் தயாராக இருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகையும் தெரிவித்தது.
ஹமாஸ் அமைப்பை அழிப்பதும், அவர்கள் பிடித்துச்சென்ற இஸ்ரேலைச் சேர்ந்த 240 பிணையக்கைதிகளை மீட்கவும் மட்டுமே போர் நடப்பதாக இஸ்ரேல் கூறி வருகிறது.
இந்நிலையில், பிணையக்கைதிகளை விடுவிக்க நாங்கள் தயார் என்று ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் அவர்கள் ஒரு கண்டிஷனையும் போட்டுள்ளனர். அந்த கண்டிஷன் - “மொத்தமாக 5 நாட்களுக்கு போர் நிறுத்தம் தேவை. காஸாவின் எந்த பகுதியிலும் தாக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் சென்று சேர வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னால், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 70 பிணையக்கைதிகளை விடுவிக்க தயாராக இருக்கிறோம்” என்றுள்ளனர்.
இஸ்ரேலுக்கு அவர்களின் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், இந்த கண்டிஷனை ஹமாஸ் தரப்பு போட்டுள்ளதாக தெரிகிறது. ஒருவேளை ஹமாஸின் இந்த நிபந்தனையை ஏற்று இஸ்ரேல் 5 நாள் போர் நிறுத்தம் செய்தால், தொடர் உயிர்பலிகளுக்கு இடையே சிறிய இடைவேளை இருக்கும். இதற்கடுத்து பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.