சில குழந்தைகள் துப்பாக்கிச்சூடுக்கு பயந்து இரண்டாவது மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்தனர்.
மத்திய ஆப்பிரிக்க நாடான மத்திய கேமரூனில் அமைந்துள்ள ஒரு பள்ளிக்கூடத்தில், மர்ம நபர்கள் சிலர் புகுந்து திடீரென்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் கேமரூனில் ஆங்கிலோஃபோன் எனும் பிரிவினைவாத குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த தாக்குதல் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்டதா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தாக்குதலில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மனித நேய விவகார ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
சில குழந்தைகள் துப்பாக்கிச்சூடுக்கு பயந்து இரண்டாவது மாடியிலிருந்து குதித்ததில் படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.