சவுதி அரேபியாவில் மன்னர் அரண்மனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புக்கு இருந்த அந்நாட்டு ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாயினர். 3 பேர் காயமடைந்தனர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் சவுதி மன்னரின் பாரம்பரிய அரண்மனை உள்ளது. இதன் மேற்கு வாயிலில் நேற்று, ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ராணுவ வீரர்கள் 2 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட அந்த நபரை மற்ற வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கொல்லப்பட்டவர் மன்சூர் அல் அம்ரி (29) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
சவுதி மன்னர் சல்மான் தற்போது ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அங்கு செல்லும் அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.