பருவநிலை மாற்றப் பிரச்னைக்கு போராடி வரும் இளம் பெண் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க், உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார்.
சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க் (16). இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னேடுத்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன்மூலம் அவர் உலகநாடுகளில் மிகவும் பிரபலம் ஆனார். இந்தப் போராட்டத்தின் போது அவர், “பருவநிலை மாற்றத்திற்காக பள்ளிக்கு செல்லவில்லை” என்று ஒரு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினார். இவரின் இந்தப் படம் இணையதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார். வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயு வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளம் தலைமுறையினரை உலகத் தலைவர்கள் ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.
சீர்க்கெட்டு கொண்டிருக்கும் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் உங்களால் அமைதியாக எப்படி இருக்க முடிகிறது?.இது எல்லாம் தவறு. நான் இங்கே இருக்கக்கூடாது. நான் கடலின் மறுபுறம் பள்ளியில் இருக்க வேண்டும். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? உங்கள் வெற்று வார்த்தைகளால் என் கனவுகளையும் என் குழந்தைப்பருவத்தையும் திருடிவிட்டீர்கள் என கடுமையாக சாடினார்.