இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன படைக்குழுவான ஹமாஸ் அமைப்புக்கும் இடையேயான போர் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வருகிறது. முதல் தாக்குதலை ஹமாஸ் தொடங்கினாலும், இதுதான் வாய்ப்பு என்று கோர தாக்குதலை தொடர்ந்து வருகிறது இஸ்ரேல் அரசு. இந்த தாக்குதலுக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க்கும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “காஸா மக்களுடன் நிற்கிறோம். உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுக்க வேண்டும்” என்று கூறி, சில பதாகைகளை கையில் ஏந்தியபடி ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல், “ஹமாஸ் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என 1,400 அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்றது. அவர்கள் 200க்கும் மேற்பட்டவர்களை கடத்தியுள்ள நிலையில், அவர்கள் மீதான கிரெட்டாவின் நிலைப்பாடு, காலநிலை செயற்பாட்டாளர் எனும் பொறுப்பிலிருந்து அவரை நீக்கியுள்ளது. கிரெட்டா தன்பர்க் இனி இஸ்ரேலிய மாணவர்களுக்கு ஒரு உத்வேகமாகவும், கல்வியாளராகவும் பணியாற்ற தகுதியற்றவர்” என்று கூறியுள்ளது.
குறிப்பாக, பாடபுத்தகங்களில் இருக்கும் கிரெட்டா தன்பர்க் தொடர்பான பாடங்களை நீக்கவும் இஸ்ரேல் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.