16 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கை இந்த ஆண்டின் சிறந்த நபராக அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்துள்ளது.
சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க் (16). இவர் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டம் நடத்தினார். இதன்மூலம் அவர் உலகநாடுகளில் மிகவும் பிரபலம் ஆனார். இந்தப் போராட்டத்தின்போது அவர், “பருவநிலை மாற்றத்திற்காக பள்ளிக்கு செல்லவில்லை” எனக் கூறி போராட்டம் நடத்தினார்.
இவரின் இந்தப் படம் இணையதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார். வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயு வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளம் தலைமுறையினரை உலகத் தலைவர்கள் ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டினார். உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த கிரேட்டாவுக்கு டைம் பத்திரிகை கவுரவம் செய்துள்ளது.
கடந்த 1927-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டைம் பத்திரிகை, உலகம் முழுவதும் கவனம் ஈர்த்த நபர்களை அவ்வாண்டின் சிறந்த மனிதர்களாக தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டின் சிறந்த நபராக கிரேட்டாவை டைம் பத்திரிகை தேர்வு செய்துள்ளது. இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நபர் பட்டியலிலேயே கிரேட்டா தன்பெர்க் தான் மிகவும் இளையவர் ஆவார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள கட்டுரையில், ''அவள் விஞ்ஞானி இல்லை. அவள் கோடீஸ்வரி இல்லை. அவள் இளவரசி இல்லை. அவள் பாப் பாடகி இல்லை. அவள் ஒரு இளைஞர் கூட இல்லை. அவள் ஒரு சதாரண சிறுமி. உண்மையை உரக்கச்சொல்லியவர், இந்த ஆண்டின் சிறந்த நபர்'' எனக் குறிப்பிட்டுள்ளது.