அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கிரேட்டா தன்பெர்க் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருபவர் சுவீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க் (16). “பருவநிலை மாற்றத்திற்காக பள்ளிக்கு செல்வதில்லை” என்ற போராட்டத்தின் மூலம் உலகளவில் பிரபலமான இவர், பருவநிலை பாதுகாப்புக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து நேற்று ஐ.நா.வில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்று பேசிய இவர், உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக சாடினார். இவர் பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், “இந்தச் சிறுமி மிகவும் சந்தோஷமாக உள்ளார் என நினைக்கிறேன். இவர் சிறப்பான எதிர்காலத்துடன் இருப்பார்” எனப் பதிவிட்டிருந்தார். இதன்மூலம் அவர் கிரேட்டா தன்பெர்கை கிண்டல் செய்திருந்தார்.
இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சுயவிவரத்தை மாற்றியுள்ளார். அதில் “நான் சந்தோஷமான இளம் பெண். நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்” என மாற்றியுள்ளார். இது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.