இலங்கையின் அதிபர் தேர்தலில் பின்னடைவை சந்தித்து வரும் சஜித் பிரேமதாச, தனது கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச களம் கண்டுள்ளார். அதேபோல இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபய ராஜபக்ச இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற தேவையான 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளை கோத்தபய ராஜபக்ச பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, கோத்தபய ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் முடிவை நான் மதித்து ஏற்றுக் கொள்கிறேன். அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் சஜித் பிரேமதாச தனது கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.