தமிழ் சினிமாவில் இப்படியாக ஒரு காமெடி காட்சி அமைத்திருப்பார்கள். எல்லோருக்கும் எளிதில் தெரிய வேண்டும் என்பதற்காக ‘கூகுள்’ என காமெடியன் பெயர் வைத்துக் கொள்வார். அந்த அளவில் கூகுள் என்பது இன்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எந்தவொரு தகவல் வேண்டும் என்றாலும் அடுத்த நொடியே கூகுள் டாட் காம் பக்கத்தில்தான் தேடுகிறோம். கூகுள் இல்லாத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கிடைக்கிறது. தகவல்களோடு, படங்களும், வீடியோக்களும் கூகுளில் கிடைக்கின்றன. ஆனால், கூகுள் கிடைக்கும் தகவல்களிலும் சிக்கல்கள் நிறைய உண்டு.
இது ஒருபுறம் இருக்க சில நேரங்களில் கூகுளில் நாம் ஒன்று தேடினால் அது வேறு ஒரு தகவலையும், படத்தையும் காட்டும். அதுவும் சில நேரங்களில் சர்ச்சைக்குரிய வகையில் இருக்கும். அப்படி பிரதமர் மோடியின் படமும் ஒரு முறை சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.
மிகப்பெரிய 10 கிரிமினல்கள் என்று கூகுளில் தேடினால் அதில் மோடியின் படமும் இருந்தது. அதேபோல், கடந்த மே மாதத்தில் கூகுளில் "Feku" என்ற வார்த்தையை டைப் செய்த போது, மோடியின் படம் வந்தது. இந்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த வகையில் கூகுள் தேடலில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சிக்கியுள்ளது. தற்போது கூகுளில் இடியட் என்று தேடினால் ட்ரம்ப் படம் வருகின்றது. அமெரிக்காவின் சில ஆன் லைன் செயற்பாட்டாளர்கள் திட்டமிட்டு இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரெட்டிட் எனப்படும் அமெரிக்க சமூக செய்தி ஒருங்கிணைப்பாளர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த இதனை முன்னெடுத்துள்ளனர்.