பாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது என கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சிறிய நகரத்தில் தொடங்கி உலக நாடுகள் வரை மீ டூ பிரசாரம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிறியது, பெரியது என்ற வித்தியாசமின்றி அனைத்து நிறுவனங்களிலும் மீ டூ எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் பாலியல் ரீதியிலான புகார்களின் அடிப்படையில் 13 மூத்த மேலாளர்கள் உள்ளிட்ட 48 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், 2014-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு நிர்வாகி ரூபின் மீது பாலியல் புகார் முன்வைக்கப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் நீண்ட விடுமுறையில் அனுப்பப்பட்டார் என்றும் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இதனை மறுத்த ரூபின் தரப்பினர் தனது சொந்த காரணங்களுக்காகவே விடுமுறையில் சென்றதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலமாக சில விளக்கங்களை கொடுத்துள்ளார். அதில் ''ரூபின் குறித்த வெளிவந்துள்ள செய்திக்குள் செல்ல நான் விரும்பவில்லை. அவர் குறித்த செய்திகளை படிப்பது கடினமான ஒன்று. கூகுள் நிறுவனத்தை பொறுத்தவரையில் 2015ம் ஆண்டே பாலியல் புகார்கள் குறித்து பல திட்டவட்டமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. யார் மீதும் பாலியல் புகார்கள் உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் தொடர்ந்து பணியாற்ற முடியாது. பாலியல் ரீதியாக புகார் கொடுக்கப்பட்ட 48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 13 பேர் மூத்த மேலாளர்கள். பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு மிகத் தீவிர முக்கியத்துவம் அளிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்