என்னது 300 சதவீதம் சம்பள உயர்வா!! கற்பனை செய்யவே கடினமாக இருக்கிறதல்லா. ஆம், இதனை செய்தது கூகுள் நிறுவனம். என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்.
கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு பொருளாதாரம் உலக அளவில் மந்தநிலையைச் சந்தித்தது. இதன் காரணமாக உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டன. குறிப்பாக மெட்டா, ட்விட்டர், அமேசான், மைக்ரோசாப்ஃட், டிஸ்னி, கூகுள் ஆகியவை தனது பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியிருந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் மட்டும் சுமார் 12,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனங்களில் இருந்து சுமார் 1,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக இந்த வேலை நீக்கங்கள் நடைபெற்று வருவதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில், போட்டி நிறுவனத்தில் சேருவதற்காக பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்த ஊழியருக்கு, கூகுள் நிறுவனம் 300 சதவீத சம்பள உயர்வை வழங்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. அதாவது நிறுவனம் ஒன்றில், அதிகபட்சம் 50% அல்லது அதைவிட சற்று அதிகமான சம்பள உயர்வை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் 300% அளவுக்கு ஓர் ஊழியருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்றால், அது எவ்வளவு பெரிய வியப்பான விஷயம். அது சமீபகாலமாக பணி நீக்கம் செய்யப்படும் கூகுள் நிறுவனத்தில்தான் இந்த மகிழ்ச்சியான விஷயம் நடைபெற்றுள்ளது என்பதுதான் மேலும் ஆச்சர்யம் தரும் செய்தியாக உள்ளது.
அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர் அமெரிக்காவைத் தளமாக கொண்ட Perplexity AI என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஒவாக உள்ளார். அலெக்ஸ் கான்ட்ரோவிட்ஸ் (Alex Kantrowitz) நடத்திய பிக் டெக்னாலஜி போட்காஸ்ட் ஷோவில் கலந்துகொண்டபோது, கூகுள் நிறுவனத்துடன் தான் சந்தித்த 300% சம்பள உயர்வு பற்றிய விவரத்தைத் தெரிவித்தார். ஐஐடி மெட்ராஸில் (IIT Madras) படித்தவரான ஸ்ரீனிவாஸ், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஓர் அற்புதமான ஊழியரை, தனது பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ ஸ்டார்ட்அப் கம்பெனியில் வேலைக்கு அமர்த்த முயற்சி செய்துள்ளார். அது வெற்றியிலும் முடிந்துள்ளது. அந்த ஊழியரும் வேலைக்கு வர ஒப்புக் கொண்டுள்ளார்.
புதிய வேலைவாய்ப்பு (New Job Offer) கிடைத்தால், ஒரு ஊழியர் தனது முதலாளியை தொடர்புகொண்டு அதுகுறித்த தகவலை தெரிவிப்பது வழக்கம். இப்படி செய்வதன்மூலம் சில நேரங்களில் வெளியில் இருந்து புதிய வாய்ப்புகளை பெறும் ஊழியர்கள், வேலையைவிட்டு செல்லாமல் இருப்பதற்கான கூடுதல் சலுகைகள் அல்லது சம்பள உயர்வை பெறுவார்கள். ஆனால் கூகுள் நிறுவனமோ அந்த ஊழியருக்கு 300% அளவுக்கு சம்பள உயர்வை கொடுத்து, அவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதாவது, அவர் ஏற்கெனவே வாங்கும் சம்பளத்தில் இருந்து, நான்கு மடங்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். அதாவது, அந்த ஊழியர் ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தால் இனிமேல் அவருக்கு சம்பவம் 4 லட்சம் ரூபாய். உண்மையில் அந்த ஊழியர் திக்குமுக்காடி இருப்பார்.
உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கங்களால் (Layoffs) பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், ஏன், கூகுள் நிறுவனத்திலேயே பணியாளர்கள் நீக்கப்பட்டு வரும் நிலையில், 300 சதவீத ஊதிய உயர்வு அளித்து ஒருவரை தங்களுடனேயே தக்கவைத்துக் கொண்ட சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.