ட்விட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட உள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் முதலில் செய்தது அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் தொடங்கி, தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரையும் பணியிலிருந்து நீக்கியது.
அதைத்தொடர்ந்து facebook, whatsapp, instagram உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
இதற்கிடையில் கூகுள் நிறுவனம், தனது தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் ஆட்குறைப்பில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளது. யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை என்றும், பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டில் செயல் திரை கண்காணிக்க உள்ளதாகவும், 2023-ம் ஆண்டில் 10,000 ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பணியில் இருந்து விடுக்கப்படும் ஊழியர்களுக்கு ஊக்க தொகை, பங்குகள் உள்ளிட்டவை வழங்குவதை தவிர்க்கும் வகையில், செயல் திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் பணியில் இருந்து நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது கூகுள் நிறுவனம். மொத்த பணியாளர்களில் 2% முதல் 6% பணியாளர்கள் இந்த ஆட்குறைப்பின் எண்ணிக்கையில் வருவார்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை தகவலின் படி, அமெரிக்காவில் உள்ள 20 மிக பெரிய நிறுவனங்களின் ஊதியத்தை விட 153% ஊதியம் கூகுள் அதன் ஊழியர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.