சொன்ன வேலையை எல்லாம் செய்யும்... கேட்டதெல்லாம் தரும் எனும் வகையிலான கதாபாத்திரங்கள் புராணங்களிலும் புதினங்களிலும் பல உள்ளன. அவற்றுக்கு அலாவுதீன் கதையில் வரும் பூதத்தை உதாரணமாக சொல்லலாம். ஆனால் இவையெல்லாம் கற்பனையே... இதே ரீதியில் எது குறித்து கேட்டாலும் பதில் தரும் அறிவியல் அதிசயம் இன்று நிஜமாகியுள்ளது. அந்த அதிசயத்தை சாத்தியமாக்கியது கூகுள்.
தவிர்க்க முடியாத அங்கமாக மாறிய கூகுள்:
லாரி பேஜ், செர்கை பிரின் (SERGAI BRIN) ஆகிய நண்பர்கள் இணைந்து 1998 ஆம் ஆண்டு உருவாக்கியதுதான் மனித சமூகத்திற்கு அறிவியல் தந்த மாபெரும் கொடையான கூகுள். வெறும் தேடுபொறியாக மட்டுமல்லாமல் மின்னஞ்சலுக்கு ஜிமெயில், தகவல் சேமிப்புக்கு கிளவ்டு, வீடியோ காட்சிகளுக்கு யூ டியூப், இடங்கள் குறித்து அறிவதற்கு கூகுள் மேப், இயங்குதளத்திற்கு ஆண்டிராய்டு என மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது கூகுள்.
கூகுளின் விசித்திர பெயர் வரலாறு:
கூகுளின் பெயர் வரலாறு சுவாரசியமானது. முதலில் இதற்கு வைக்கப்பட்ட பெயர் கூகால் (GOOGOL). ஒன்றுக்கு பக்கத்தில் நூறு பூஜ்யங்களை சேர்த்து எழுதப்படும் எண்ணுக்கான கணிதவியல் பெயர்தான் கூகால். அதிகம் பரிச்சயமில்லாத இ்ந்த பெயர், பலரால் தவறாக உச்சரிக்கப்பட்டு கூகுள் என மாறி பின்னர் அதுவே நிலைத்து விட்டது.
ஆல்பாபெட்டாக உருவெடுத்த கூகுள்! தலைமைப்பொறுப்பில் தமிழர்!
அறிவியல் உலகில் மேலும் பல தளங்களில் தன்னை விரிவுபடுத்திக்கொண்டு வரும் கூகுள் 2015 ஆம் ஆண்டு முக்கிய மாற்றம் கண்டது. கூகுளின் பல்வேறு தொழில்நுட்ப சேவைகள் அல்ஃபாபெட் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதில் கூகுள் முதன்மையான நிறுவனமாக மாறியது. நிறுவனர் லாரி பேஜிற்கு பிறகு அதன் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார் சுந்தர் பிச்சை. இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சையின் சொந்த ஊர் சென்னை.
9 லட்சம் சர்வர்களை கொண்ட கூகுள்:
இதுவரை 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கூகுள் நிறுவனம் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள். இப்படிப் பல வியப்பூட்டும் ஆச்சரியங்களுக்குப் பாத்திரமாக இன்று வரை கூகுள் திகழ்ந்து வருகிறது.
ஒருநாளில் 350 கோடி பேர் பயன்படுத்தும் கூகுள்:
ஒரு நாளில் கூகுள் தேடுபொறியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 350 கோடி. இது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதியளவு. இந்த ஒரு புள்ளிவிவரமே கூகுளி்ன் உலகளாவிய வீச்சை உணர்த்த போதுமானதாக உள்ளது. அப்படிப்பட்ட உலக ஜாம்பவானின் 25வது பிறந்த நாள் இன்று. ஆம் இதே நாளில் தான் 1998 ஆம் ஆண்டு கூகுள் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கும் கூகுளுக்கு இன்று வெள்ளி விழா!
Happy Silver Jubilee anniversary Google!
ஆனால் பிறந்தநாளை செப்டம்பர் 27 அன்றுதான் கூகுள் கொண்டாடும்! காரணம் என்ன?
கூகுள் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்டது. முதல் 7 ஆண்டுகளில் கூகுள் செப்டம்பர் 4ஆம் தேதியன்று தான் தனது பிறந்தநாளைக் கொண்டாடியது. இருப்பினும், ஒருமுறை செப்டம்பர் 27ஆம் தேதியன்று கூகுள் தேடுபொறியின் பயன்பாடு வியத்தகு சாதனை எண்ணைத் தொட்டது. அதன் பின்னர் செப்டம்பர் 27 ஆம் தேதியே ஆண்டுதோறும் கூகுள் பிறந்தநாளாக கொண்டாடி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.