மருத்துவர்களின் அலட்சியத்தால் பெண் ஒருவர் தன் வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்து வந்தது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2000 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்துள்ளார். அப்போது அவருக்கு உணவளிக்க பயன்படுத்திய 12 இன்ச் ரப்பர் குழாய் அவரின் வயிற்றுக்குள் சென்றுள்ளது. ஆனால், அந்த பெண் சுயநினைவு இன்றி இருந்ததால் இதுகுறித்து அவருக்கு தெரியவில்லை. அதே போல் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் வயிற்றில் இருந்த ரப்பர் குழாயை அகற்ற மறந்து விட்டனர்.
சமீபத்தில் பக்கவாதத்தில் இருந்து குணமடைந்த அப்பெண்ணுக்கு வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாய் இருப்பதை பற்றி எந்த அறிகுறியும் தென்படவில்லை. இயல்பாகவே அனைத்து உணவுகளை உட்கொண்டுள்ளார். அண்மையில் முழு உடல் பரிசோதனைக்கு சென்ற அந்த பெண்ணின் வயிற்றின் குடல் பகுதியில் இருந்த கருப்பு நிற பொருளை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றி உள்ளனர். அறுவை சிகிச்சை செய்த பின் அவரின் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் 17 ஆண்டுகளாக குடல் பகுதியில் இருந்த ரப்பர் குழாயினால் அந்த பெண்ணிற்கு சிறிய பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுதான் வியப்பின் உச்சம்.