உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் உலகம் முழுவதும் முன்னிலையில் உள்ளது. இந்தியாவிலும் டெஸ்லா நிறுவனத்திற்காக முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தானியங்கி கார்களுக்கான மென்பொருளை சீனாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் சமீபத்தில் எலான் மஸ்க் ஆலோசனை நடத்தி இருந்தார். இந்த நிலையில், சீனாவைச் சிறுமி ஒருவர் எலான் மஸ்க்கிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறாது.
சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள திரையில், தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது அவர் வரைந்த படங்கள் திடீர் திடீரென காணாமல் போகிறது. இதனால் கவலையடைந்த அந்தச் சிறுமி, இதில் ஏதோ பிழை இருப்பதாகவும் அதை எலான் மஸ்க் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து, அதை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “ஹலோ மிஸ்டர் மஸ்க், நான் சீனாவின் மோலியில் உள்ளேன். என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியது. நான் படம் வரையும்போது, சில நேரங்களில் லைன் இதுபோன்று (வீடியோவை காட்டி) மறைந்துவிடுகிறது. நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் அல்லவா... இதைச் சரி செய்ய முடியுமா? நன்றி" என அதில் குறிப்பிட்டு, எலாஸ் மஸ்க்கையும் டேக் செய்துள்ளார். இதைக் கவனித்த எலான் மஸ்க்கும், “நிச்சயமாக” எனப் பதிலளித்துள்ளார். வைரலாகும் இந்த வீடியோவுக்குப் பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ இதுவரை ஒரு மில்லியன் பார்வைகளையும் 14,000 விருப்பங்களையும் பெற்றுள்ளது.
பயனர் ஒருவர் அளித்துள்ள பதிலில், "அற்புதம். இந்த பிழையை எங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. எலான் பதிலளிப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இன்னொருவர், ”பிரச்சனையை விளக்கியதில் நன்று மோலி" எனத் தெரிவித்துள்ளார்.