அமெரிக்காவில் சோதனை முயற்சியின்போது தன் காதலரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தைச் சேர்ந்தவர் மோனாலிஸா பெரெஸ். இவரும் இவரின் காதலரான பெட்ரோ ரூயிஸும் சமூக வலைதளத்தில் அதிகளவில் ரசிகர்களை வரவழைப்பதற்காக அடிக்கடி சில சாகசங்களில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி துப்பாக்கியால் சுடும் புதிய சாகசம் ஒன்றில் இருவரும் ஈடுபட திட்டமிட்டனர். தடினமான புத்தகம் ஒன்றை நெஞ்சில் வைத்து அதில் துப்பாக்கியால் சுட்டால் தோட்டா உள்ளே செல்லாது என்ற சோதனையை மேற்கொள்ள ஆயத்தமான காதலர்கள் இதுகுறித்து யுடியூப்பில் உள்ள தங்கள் நட்பு வட்டாரத்திலும் தகவல் வெளியிட்டனர்.
இந்த சாகச சோதனையை மேற்கொள்ள இருவரின் வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களின் பேச்சை மீறி இருவரும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இணையத்தில் லைவாக நடைபெற்ற இந்த சோதனையின் போது காதலர் ரூயிஸ் நெஞ்சில் புத்தகத்தை பிடித்திருந்த நிலையில், காதலியான மோனாலிஸா அதனை நோக்கி சுட்டார். கண் இமைக்கும் நேரத்தில் புத்தகத்திற்குள் ஊடுருவிச் சென்ற துப்பாக்கித் தோட்டா ரூயிஸின் நெஞ்சில் பாய்ந்தது. இதில் ரூயிஸ் சம்பவ இடத்திலே பலியானார். இந்த சம்பவத்தை நேரிலும், இணையத்திலும் பார்த்து ஏராளமானோரும் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோனாலிஸாவை திட்டமிடாத கொலை என்ற பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட மோனாலிஸா 5 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.