இந்தியாவிலிருந்து சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனியில் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதட்டம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த விமானத்தை ஜெர்மனியின் போர் விமானங்கள் சுற்றி வளைத்தன.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பையிலிருந்து 345 பேருடன் லண்டன் சென்ற போயிங் விமானம் கடந்த வியாழக்கிழமை ஜெர்மனியின் கலோன் நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழவே, உடனடியாக ஜெர்மனியின் போர் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை சுற்றி வளைத்தன. எனினும், சில நிமிட இடைவெளிக்குப் பிறகு கட்டுப்பாட்டு அறையுடன் ஜெட் ஏர்வேஸ் விமானத்துக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பதட்டம் நீங்கி, ஜெர்மனி போர் விமானங்கள் திரும்பிச் சென்றன. கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜெட் ஏர்வேசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.