தேர்தல் அதிகாரி ஒருவரை ட்ரம்ப் மிரட்டுவதுபோல் ஒரு ஆடியோ வெளியாகி, அமெரிக்காவில் அதிர்வலை உண்டாக்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜோ பைடன் வெற்றி பெற்றுவிட்டார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால், இந்த முடிவுகளை டொனால்ட் ட்ரம்ப் ஏற்க தயாராக இல்லை. ஜோ பைடன் வெற்றியை நம்பகமான ஊடகங்கள் உறுதி செய்து அறிவித்தன. ட்ரம்பை ஆதரிக்கும் ஃபாக்ஸ் தொலைக்காட்சிகூட ஜோ பைடன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று அறிவித்துவிட்டது. ஏன், அதைவிட அமெரிக்காவின் தேசிய தேர்தல் அதிகாரிகளே எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும், ட்ரம்ப் மட்டும் அதை ஏற்காமல் இருந்து வந்தார். குடியரசு கட்சியினர் சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடத்தியதாக கூறி வழக்கு தொடுத்தார்.
பின்னர் நீண்ட இழுபறிக்கு பின் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்ய சம்மதித்து, அதற்கான பூர்வாங்க பணிகளை செய்ய உத்தரவிட்டு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ட்ரம்ப். ஆட்சி அதிகாரத்தை மாற்ற ஒப்புக்கொண்டாலும், பைடன் தரப்பு முறைகேடு செய்தது என்று தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். இதற்கு எந்த ஆதாரமும் இதுவரை ட்ரம்ப் தரப்பில் இருந்து கொடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், ட்ரம்ப் பேசும் ஒரு ஆடியோ அமெரிக்காவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஜார்ஜியா மாகாணத்தின் வாக்கு எண்ணிக்கையின்போது, மாகாண தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடிவுகளை தனக்கேற்ப மாற்ற வேண்டும் என ட்ரம்ப் மிரட்டும் தொனியில் பேசும் ஆடியோதான் அது. வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த ஆடியோவில், ரஃபென்ஸ்பெர்கரிடம் ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சுமத்திய ட்ரம்ப், ``பைடன் தரப்பு என்ன முறைகேடு செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், தேர்தல் அதிகாரி என்ற முறையில் நீங்கள் அதைப் புகாரளிக்கவில்லை. இதுவே ஒரு கிரிமினல் குற்றம். சட்டப்படி முறைகேடுகளை நீங்கள் அனுமதிக்க முடியாது. இது உங்களுக்கும், உங்களின் வழக்கறிஞருக்கும் ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். தேர்தல் முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எனக்கு கூடுதலாக 11,780 வாக்குகள் தேவைப்படுகிறது. எனவே, தேர்தல் முடிவை மாற்ற தேவையான வாக்குகளை கண்டுபிடியுங்கள்" என மிரட்டும் தொனியில் பேசுவதாக அமைந்துள்ளது.
ஆனால், இந்த மிரட்டலுக்கு பணியாத தேர்தல் அதிகாரி ரஃபென்ஸ்பெர்கர், ``அதிபரே, நீங்கள் வைத்திருக்கும் தகவல்கள் தவறானது. உங்களுக்கு தரவுகளை கொடுக்கும் நபர்கள் இருப்பதுபோல், எங்களிடம் தரவுகளை கொடுக்க ஆள்கள் இருக்கிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவு எடுக்கட்டும். எங்கள் தரவுகள் சரியானவை என்று நாங்கள் நம்புகிறோம். தேர்தல் முடிவுகள் சரியானவைதான்" என்று பதில் கொடுக்கிறார்.
ஜோ பைடன் வென்ற மாகாணங்களில் முக்கியமான ஒன்று ஜார்ஜியா. இந்த மாகாணத்தில் 74 தேர்தல் சபை வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப்பை தோற்கடித்திருந்தார் பைடன்.
ஜார்ஜியா மாகாணத்தில் கூடுதலாக 11,780 வாக்குகள் இருந்தால், பைடன் பெற்ற 2,473,633 வாக்குகளை விட ஒரு வாக்கு கூடுதலாக 2,473,634 வாக்குகள் ட்ரம்ப் பெற முடியும். இதனால்தான் அவர் தேர்தல் அதிகாரியை மிரட்டி அழுத்தம் கொடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் அமெரிக்காவில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகை தரப்பில் இந்த ஆடியோ தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.