இஸ்ரேல் - காஸா இடையே ஒன்றரை மாதத்திற்கும் மேல் நடந்துவந்த போரில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியான நிலையில், 6 நாள் போர் நிறுத்தம் மக்களுக்கு சுவாசிக்க இடைவெளியை கொடுத்துள்ளது. இந்நிலையில், காஸாவில் தங்களது கனவு இல்லத்தை தொலைத்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரான ஆசிரியர் யாசின் அல் ஜாரா, தனது நிலை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
கான் யூனிஸ் பகுதியைச் சேர்ந்த இவர், 15 ஆண்டுகளாக போராடி தனது குடும்பத்தாருக்காக வீட்டை கட்டியுள்ளார். பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், போரின் மூன்றாம் நாளிலேயே தனது வீட்டிலிந்து வலுக்கட்டாயமாக இஸ்ரேல் ராணுவத்தினரால் வெளியேற்றப்பட்டுள்ளார். போர் நிறுத்தத்தின் போது திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது கனவு இல்லம் சுக்குநூறாக நொறுக்கப்பட்டதை கண்டு அதிர்ந்துள்ளார்.
இந்தப் போர் குறித்து பேசிய அவர், “இத்தனை நாட்களாக குடிநீர், சாப்பாடு, மருந்து அவ்வளவு ஏன் கழிவறை வசதி கூட இல்லாமல் இருந்தோம். இப்போதுதான் இங்கு வந்துள்ளோம். வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டபோது, தண்ணீரில் இருந்து மீனை வெளியே தூக்கிப்போட்டது போன்றுதான் இருந்தது. இனி போர் நீடித்தாலும், இங்கிருந்து செல்ல மாட்டேன். செத்தாலும் புதைத்தாலும் அது இங்குதான். இங்குதான் நான் பிறந்தேன். எனது மூதாதையர்கள் பிறந்த இடம் இது. எங்கும் செல்ல மாட்டேன்" என்றுள்ளார். அவரது 9 வயது மகன் பேசுகையில், “தெருக்களில் இருப்பதற்கு இடிந்துபோன இந்த வீட்டில் இருப்பது நன்றாக இருக்கிறது. எனது புத்தகம், படுக்கை, விளையாட்டு பொம்மைகள் எல்லாம் தொலைந்துவிட்டது” என்று வெகுளித்தனமாக பேசியுள்ளார்.
நடந்த இந்த போரில் யாசினும் வீடுகளை இழந்த ஆயிரத்தில் ஒருவராக இருக்கிறார். இந்த போரில் மட்டும் 2,78,000 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. யாசின் போல் இன்னமும் ஆயிரம் ஆயிரம் பேர் அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.