போக்குவரத்து நிறைந்த சாலையைக் கடப்பதற்கு சுரங்கப் பாதைகளை பயன்படுத்துகிறோம். சிறையில் இருந்து தப்பித்துச் செல்வதற்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளன. ஆனால், நாடு விட்டு நாடு செல்வதற்காக காஸா பகுதியில் பல சுரங்கப் பாதைகள் தோண்டப்பட்டுள்ளன.
பாலஸ்தீனத்தின் காஸா துண்டுநிலப் பகுதியில் இருந்து எகிப்து நாட்டுக்குள் செல்வதற்காக ஏராளமான சுரங்கப்பாதைகள் தோண்டப்பட்டிருக்கின்றன. காஸா துண்டுப் பகுதி ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, இஸ்ரேலின் அனுமதியில்லாமல் அந்தப் பகுதிக்கு எந்தப் பொருளையும் கொண்டுவர முடியாது. இன்னொருபுறம் எகிப்தும், காஸா பகுதிக்குச் செல்லும் ரஃபா எல்லை மற்றும் அதை ஒட்டியுள்ள ஃபிலடெல்பி பாதை ஆகியவற்றில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாகத்தான் காஸாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் இதுபோன்ற சுரங்கப்பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தச் சுரங்கங்கள் வழியாக எகிப்தில் இருந்து உணவு தானியங்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமல்ல. ஆடு, மாடுகள் கூட காஸா பகுதிக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. எகிப்தில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் ஆயுதங்களை ஹமாஸ் அமைப்பினருக்காகக் கடத்திச் செல்வதற்கும் காஸா சுரங்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சுரங்கங்களை தோண்டுவதும், அதைப் பராமரிப்பதும் அப்பகுதியில் ஒரு தொழிலாகவே நடந்து வருகிறது.
சுரங்கப் பாதை வழியாக ஒரு பொருளைக் கொண்டு செல்வதற்கு குறிப்பிட்ட தொகையை வசூலித்துக் கொள்கிறார்கள் இவற்றின் உரிமையாளர்கள். எகிப்து எல்லை மட்டுமல்லாமல், இஸ்ரேலின் பகுதிகளுக்குள் நுழைவதற்கும் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுரங்களைத் தோண்டுவதும் உண்டு. இவை மூலமாக இஸ்ரேலுக்குள் ஆயுதங்கள் கடடத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அவ்வப்போது குற்றம்சாட்டி வருகிறது. பல நேரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் இவை முற்றாக அழிந்து விடுகின்றன.
இஸ்ரேலைப் பொறுத்தவரை இவையெல்லாம் சட்டவிரோத கடத்தலுக்கான பாதைகள், ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதக் கடத்தலுக்கான வழிகள். ஆனால், காஸா பகுதியில் அடைபட்டுக் கிடக்கும் அப்பாவி மக்களுக்கு, இவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கான ஜன்னல்கள்.