அதானி, அம்பானிக்கும் கீழே சரிந்த ஃபேஸ்புக் மார்க்கின் சொத்து மதிப்பு - காரணம் இதுதான்!

அதானி, அம்பானிக்கும் கீழே சரிந்த ஃபேஸ்புக் மார்க்கின் சொத்து மதிப்பு - காரணம் இதுதான்!
அதானி, அம்பானிக்கும் கீழே சரிந்த ஃபேஸ்புக் மார்க்கின் சொத்து மதிப்பு - காரணம் இதுதான்!
Published on

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்ததால், அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு, இந்தியாவின் கௌதம் அதானி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விடவும் கீழே சரிந்துள்ளது.

உலக அளவில் ஃபேஸ்புக் தளத்தில் தினசரி ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில், இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளது. இதற்கு டிக்டாக், யூ-டியூப் போன்ற சமூக வலைதளங்களின் போட்டி மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தனியுரிமை கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம் ஆகியவையே காரணம் என்று மெட்டா கூறியுள்ளது. மேலும் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் விளம்பரதாரர்களும் செலவினை குறைத்துள்ளனர். இதன்காரணமாக விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் பின்னடைவை சந்தித்துள்ளது மெட்டா.

மேலும், மெட்டாவில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 26 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. இந்தப் பங்கின் விலையானது 26.39% குறைந்து 237.76 டாலர்களாக குறைந்துள்ளது. இதனால் சுமார் 20,000 கோடி டாலருக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய சரிவினை கண்டுள்ள நிலையில், மார்க் ஜூக்கர்பெர்க்கின் நிகர சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலராக, அதாவது 8,500 கோடி டாலராகச் சரிந்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஜூக்கர்பெர்க் சுமார் 12.8% பங்கினை மெட்டா நிறுவனத்தில் வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மார்க் ஜூக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு, இந்தியாவின் முகேஷ் அம்பானி, கௌதம் அதானியின் சொத்து மதிப்பை விடவும் கீழே சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கெளதம் அதானியின் நிகர மதிப்பு சுமார் 90 பில்லியன் டாலராகும். இவர் தற்போது 10-வது இடத்தில் உள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய பில்லியனரான முகேஷ் அம்பானி 11-வது இடத்தில் 89 பில்லியன் டாலருடன் உள்ளார். மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது 12-வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com