பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் பதவி வகித்து வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவேல் மேக்ரான் 2வது முறையாகப் பதவியேற்றார்.
பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இம்மானுவேல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மேலும் இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த மேக்ரான் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார். இதனிடையே, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரான்சின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்ற எலிசபெத் போர்ன், பொறுப்பேற்றுக் கொண்ட இரண்டு ஆண்டுகளில் பதவி விலகியது பல்வேறு தரப்பினரிடையே சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து புதிய பிரதமர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அதுவரை பிரதமர் பொறுப்புகளை எலிசபெத் போர்ன் கவனிப்பார் என்றும் பிரான்ஸ் அரசு அறிவித்தது.
பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமராக 34 வயதான அந்நாட்டின் கல்வித் துறை அமைச்சர் கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேப்ரியல் அட்டல், தன்னை ஓர் தன்பாலின ஈர்ப்பாளர் என வெளிப்படையாக அறிவித்தவர் ஆவர். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டால், பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பையும், அதோடு பிரதமராக பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற சிறப்பையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சோசியலிச கட்சியின் உறுப்பினராக இருந்த கேப்ரியல் அட்டல், கடந்த 2016ஆம் ஆண்டு இம்மானுவேல் மேக்ரான் தொடங்கிய மறுமலர்ச்சி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மேக்ரானின் நெருங்கிய கூட்டாளியான கேப்ரியல் அட்டல், கோரோனா தொற்றுநோயின்போது அரசாங்க செய்தித் தொடர்பாளராக பணியாற்றி முக்கியத்துவம் பெற்றார். தொடர்ந்து பிரான்ஸ் கல்வி அமைச்சராக கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டார். கல்வி அமைச்சர் பதவி வகித்தபோது பல்வேறு புதிய வழிமுறைகளை கல்வித் துறையில் புகுத்தி கவனம் அரசு மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து தற்போது பிரான்ஸின் பிரதமராக கேப்ரியல் அட்டல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.