பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முரண்பாடுகள் நிறைந்த ஒரு வித்தியாசமான ஆளுமை. அவரது கிரிக்கெட் நாட்களில் இருந்து பாகிஸ்தான் பிரதமரின் அரியாசனத்தில் அவர் இருப்பது வரையிலான கதை திகைப்பூட்டக்கூடியது.
நேற்று வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், இன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியை தற்காலிக பிரதமராக்க பரிந்துரை செய்துள்ளார். மீண்டும் தேர்தல் வந்து அதில் வென்றால் மட்டுமே இனி அவர் பிரதமர். அவரது பிரதமர் வாழ்க்கையை பல மடங்கு ஏற்ற இறங்கங்கள் நிறைந்தது அதற்கு முன்பான அவரது சொந்த வாழ்க்கை!
பாரம்பரியம் மிக்க குடும்பம்!
அவரது முழுப் பெயர் இம்ரான் கான் நியாசி. பாகிஸ்தானின் மிக நீண்ட நெடிய பாரம்பரியம் மிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தார் இம்ரான் கான். சொந்த ஊரிலேயே கல்வி கற்கத் துவங்கினார். ஐட்சிஷன் கல்லூரியில் படித்துவிட்டு மேற்படிப்புக்காக இங்கிலாந்து புறப்பட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் உள்ள வொர்செஸ்டர் கிராமர் பள்ளி மற்றும் கெப்ளே கல்லூரியிலும் பயின்றார். அப்போதே கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டத் துவங்கினார் இம்ரான் கான். 1973-1975 கால கட்டத்தில் ஆக்ஸ்போர்டு புளூஸ் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று கிரிக்கெட் விளையாடி வந்தார்.
கிரிக்கெட்டில் இம்ரான்!
1971 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார் இம்ரான். 1974 ஆம் ஆண்டு அதே இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகமானார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பட்டம் பெற்ற பிறகு 1976 ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். தனது அபாரமான திறமையால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். அதன்பின் அவரில்லாமல் பாகிஸ்தான் அணி களமிறங்குவது அரிதிலும் அரிதாக மாறியது. அவரது கிரிக்கெட் வாழ்க்கை உலகக் கோப்பையை கையில் ஏந்தும்வரை நீடித்தது.
இம்ரானின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்:
ஒரு காலத்தில் இம்ரான் கான் 'விளையாட்டு வீரரின்' உருவகமாக கருதப்பட்டார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியில், வக்கார் யூனிஸின் பந்து வீச்சில் நடுவரால் கே. ஸ்ரீகாந்த் 'எல்பிடபிள்யூ' ஆக்கப்பட்டார், ஆனால் ஸ்ரீகாந்த் பந்தை எட்ஜ் செய்ததாக வலியுறுத்தினார். இம்ரான் கான் அபரிமிதமான முதிர்ச்சியையும், அமைதியையும், எல்லாவற்றிற்கும் மேலாக 'கண்ணியத்தையும்' காட்டி ஸ்ரீகாந்தை திரும்ப பேட்டிங் அழைத்தார். விளையாட்டுத்திறனின் உண்மையான ஆன்மா இம்ரான் கானிடம் வெளிப்பட்டதாக அப்போது பத்திரிகைகள் அவரை புகழ்ந்து தள்ளின.
கிரிக்கெட்டில் சாதனை மேல் சாதனைகள்:
பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற பிறகு, மிகச் சிறப்பான ஆட்டத்தால் கவனம் பெற்றார். பாகிஸ்தான் அணியும் உலகளவில் கவனம் பெறத் துவங்கியது. அவரது சாதனைகள் அப்போது விளையாட்டு செய்திகளின் வழக்கமான தலைப்புகளாக மாறிப் போயின. தன் அணி வீரர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அப்போது பெரும் கவனம் பெற்றது. அந்த புகைப்படத்தில் இம்ரான் கான் “பிக் பாய்ஸ் ப்ளே அட் நைட்” என்று வசனம் எழுதப்பட்ட டி-சர்டை அணிந்திருப்பார். 1992 இல் பாகிஸ்தானை உலகக் கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்ற கவர்ச்சியான கேப்டனாக இம்ரான் கான் மாறியிருந்தார். உலகக் கோப்பையை வென்றதும் இம்ரானின் இலக்கு வேறாக இருந்தது. சரியாக திட்டமிட்டாரோ? என்னவோ? அரசியலில் இறங்கினார் இம்ரான் கான்.
இம்ரானின் ப்ளேயிங் டேஸ்:
கிரிக்கெட் தவிர்த்து இம்ரானின் பெயர் செய்திதாள்களில் வேறு சில பக்கங்களில் அடிக்கடி இடம்பெறும். சில நடிகைகளுடன் சுற்றுகிறார், அழகிகளுடன் இருக்கிறார் என அந்த செய்திகளும் சலித்துப் போகும் அளவு மீண்டும் மீண்டும் வெளியாகி இருந்தன. அவரே ஒருமுறை பேட்டியில் “எனது பிளேபாய் பட்டம் மிகைப்படுத்தப்பட்டது, ஆனால் நான் ஒரு புனிதன் அல்ல” என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இந்த செய்திகள் அனைத்தும் பிரிட்டிஷ் சோசலிஸ்ட் ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை இம்ரான் திருமணம் செய்ததும் நின்றுபோனது.
அரசியலால் திருமண முறிவு!
ஜெமிமா கோல்ட்ஸ்மித் - இம்ரான் திருமணம் கடும் சர்ச்சைகளை கிளப்பியது. அப்போது அவர் அரசியலில் இருந்ததால் பாகிஸ்தானின் பழமைவாத சங்கம் அவரது திருமணத்தை கடுமையாக எதிர்த்தது. ஜெமிமா மதம் மாறி இஸ்லாத்தை தழுவினார் என்பது சர்ச்சை கொளுந்து விட்டெறிய காரணமாக அமைந்தது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். ரெகாம் வரும் வரை! ஆம்! ஜெமிமாவை விவாகரத்து செய்து விட்டு பிபிசி பத்திரிகையாளர் ரெகாம் கானை திருமணம் செய்து கொண்டார் இம்ரான் கான்.
அரசியலுக்காக 3வது திருமணம்!
ரெகாம் கான் திருமணத்திற்கு புஷ்ரா பிபியை சந்தித்தார் இம்ரான் கான். புஷ்ராவை திருமணம் செய்வதன் மூலம் தன் அரசியல் லட்சியங்களை அடைய முடியும் என இம்ரான் நம்பத் துவங்கினார். முழுக்க இஸ்லாத்தை பின்ப்ற்றும் புஷ்ராவை திருமணம் செய்தால் பழமைவாதிகளை சமாளிக்கலாம் என எண்ணி ரெகாமை விவாகரத்து செய்து விட்டு, புஷ்ரா பிபியை கரம் பிடித்தார். தனது மோசமான கடந்த காலத்தை இந்த திருமணத்தின் மூலம் மழுங்கடிக்க செய்ய முடியும் என அவர் நம்பினார். அவர் நினைத்தது சரியாகத் தான் அமைந்தது.
பிரதமர் இம்ரான் கான்:
பழமைவாத குழுக்கள் இம்ரானுக்கு எதிராகச் செய்த பிரச்சாரங்கள் எடுபடாமல் போயின. மக்கள் மத்தியில் இம்ரானின் பேச்சுக்கு ரசிகர்கள் உருவாகியிருந்தனர். பிரதமர் பதவியில் நடைபெற்று வந்த மியூசிக்கல் சேர் ஏற்கனவே இருந்த தலைவர்கள் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்களின் இந்த மனப்பான்மை இம்ரான் கானுக்கான ஆதரவு அலையாக உருவெடுத்தது. அலையின் எழுச்சியில் பிரதமர் பதவியில் கரை சேர்ந்தார் இம்ரான் கான்.
இம்ரான் கான் இனி?
பாகிஸ்தான் பிரதமர் பதவி பஞ்சு மெத்தை அல்ல! ஏகப்பட்ட பிரச்சினைகள், உள்நாட்டு தீவிரவாத அச்சுறுத்தல். எல்லை பிரச்னை என முள் கீரிடத்தை தலையில் வைத்து இருந்தார் இம்ரான். எந்த பிரதமரும் பாகிஸ்தானில் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ததில்லை என்ற சோக வரலாறு அந்நாட்டிற்கு உண்டு! இம்ரான் மட்டும் அதற்கு விதி விலக்காவரா என்ன? 4 ஆண்டுகளை கூட முழுமையாக ஆட்சி செய்யும்முன்பே நெருக்கடிகள் சூழ்ந்துவிட்டன. உடனிருந்த கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ப்ளான் போட ஆட்சியை கலைத்து விட்டார் இம்ரான்.
மீண்டும் பிரதமர் ஆவாரா இம்ரான்!
பாகிஸ்தான் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியை தற்காலிக பிரதமராக்க அதிபரிடம் பரிந்துரை செய்துள்ளார் இம்ரான். மீண்டும் தேர்தல் வந்து அதில் வென்றால் மட்டுமே இனி அவர் பிரதமர். மக்கள் மத்தியில் வேறு யாருக்கும் பெரிய ஆதரவு இருப்பதாக தெரியவில்லை. தேர்தல் வந்தால் இம்ரானுக்கு செகண்ட் இன்னிங்ஸ் கிடைக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.