ஹாலோகிராம் எனும் தொழில்நுட்ப உதவியுடன் பிரான்ஸ் அரசியல் தலைவர் ஒருவர் ஒரேநேரத்தில் இருவேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு அசத்தியுள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வளர்ச்சி கண்டுவரும் இந்தசூழலில் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த மெலஞ்சியோன் என்பவர் ஹோலோகிராம் எனும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பாரிஸ் மற்றும் லியோன் ஆகிய இரு இடங்களில் ஒரே நேரத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அரசியல் தலைவர் மெலஞ்சியோன் அல்ல. துருக்கியின் அதிபராக உள்ள தயீப் எர்டோகன், இதே ஹாலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.
ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் லேசர் கற்றைகள், ஒரு பொருளை முப்பரிமாண வடிவில் எதிரொலிக்க வல்லவை. இதன்மூலம் ஒரே நேரத்தில் பல்வேறு இடங்கள் அந்த பொருளின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்க இயலும். எந்திரன் படத்தில் விஞ்ஞானியான ரஜினி, சிட்டி ரோபோவுடன் இதேபோன்ற ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் உரையாடும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.