பிரெஞ்சு நாட்டிற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், பாகிஸ்தானிலிருந்து பிரெஞ்சு நாட்டினர் மற்றும் பிரெஞ்சு நிறுவனங்கள் வெளியேறுமாறு அந்நாட்டின் தூதரகம் அறிவுறுத்தியிருக்கிறது.
இஸ்லாமியர்களின் புனிதத்திற்குரிய நபிகள் நாயகத்தை அவதூறாக சித்தரிக்கும் கார்ட்டூன்களை வெளியிடுவதற்கான, ஒரு பத்திரிகையின் உரிமைக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கம் ஆதரவு தெரிவித்ததிலிருந்து பிரெஞ்சு எதிர்ப்பு போராட்டங்கள் பாகிஸ்தானில் பல மாதங்களாக நடந்து வருகிறது.
பிரெஞ்சு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த வாரம் நாட்டின் பெரும் பகுதிகளில் வன்முறை ஏற்பட்டதால், பாகிஸ்தானில் உள்ள பிரெஞ்சு தூதரகம் அனைத்து பிரெஞ்சு நாட்டினரும், நிறுவனங்களும் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியது. இவர்கள் பாகிஸ்தானை விட்டு புறப்பட தற்போதுள்ள வணிக விமான நிறுவனங்கள் மூலமாக கிளம்பலாம் என்றும் தூதரகம் தெரிவித்தது.
பிரெஞ்சு தூதரை வெளியேற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்த தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தானின் (டி.எல்.பி) தலைவரான சாத் ரிஸ்வி, நேற்று கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இவர் நேற்று அனைத்து நகரங்களிலும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதல்களில் இரண்டு போலிஸ் அதிகாரிகள் இறந்தனர்,
இப்போராட்டத்தை அடக்க தண்ணீர் பீரங்கி, கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன. இது தொடர்பாக "நாங்கள் நபியின் கவுரவத்தைப் பாதுகாக்க ஆதரவளிக்கிறோம், ஆனால் இதுபோன்ற போராட்டங்கள் பாகிஸ்தானை உலகளவில் ஒரு தீவிரவாத தேசமாக சித்தரித்திருக்கக்கூடும்" என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தெரிவித்தார்.