பார்ப்பதற்கு வாஷிங் மெஷின் அளவிற்கு இருக்கும் இது குழந்தைகள் விளையாடும் பொம்மை கார் அல்ல. மனிதர்கள் பயணிக்கும் நிஜ கார். இந்த காரை இயக்க எரிபொருளோ, ஓட்டுநர் உரிமமோ தேவையில்லை. ஏனெனில் இது மின்சார கார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிட்ரியான் நிறுவனம் தயாரித்துள்ள இந்த காருக்கு அமி என பெயரிட்டுள்ளது. 2 ஆயிரத்து 41 மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்த கார் இரண்டு இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஓட்டுநருடன் இணைந்து ஒருவர் மட்டுமே இந்த காரில் பயணிக்க முடியும். இதில் உள்ள 5.5 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரமாகும். பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் ப்ளூடூத், Onboard charging Cable உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அமி மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்த மினி மின்சார காரை குறுகிய சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக இயக்கலாம். மேலும் அமி காருக்கு பார்க்கிங் பிரச்னையும் இல்லை. நகரவாசிகளை கருத்தில் கொண்டே இந்த கார் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள சிட்ரியான் நிறுவனம், அமி காருக்கான முன்பதிவு மார்ச் 30 ஆம் தேதி முதல் பிரான்சிலும், சில மாதங்களுக்கு பிறகு ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் தொடங்க உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் 4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிட்ரியான் நிறுவனம், விரைவில் இந்தியாவில் தனது முதல் கார் ஷோருமை அகமதாபாத்தில் நிறுவ உள்ளது. எனவே, அமி கார் விரைவில் இந்தியாவிலும் களமிளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.