ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 75 வருடங்களுக்கும் மேலாக ஒரு பைசா கூட கட்டணம் வசூலிக்காமல் தினமும் மரத்தடியில் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுப்பது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
ஒடிசாவின் பார்தாண்டா கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியரான நந்தா பிரஸ்டி என்ற வயதான ஆசிரியர் ஏழைக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க இடம் இல்லாததால் கடந்த 75 வருடங்களாக மரத்தின் நிழலிலேயே டியூஷன் சொல்லிக்கொடுத்து வருகிறார். இவர், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் கற்பிக்கவில்லை. வயதானவர்களுக்கும் மாலை நேரங்களில் சேர்த்தே கற்பிக்கிறார். இதற்காக, யாரிடமிருந்தும் ஒரு ரூபாய்கூட கட்டணம் வாங்கவில்லை. இவரது சேவையை ஒடிசா முழுக்க பாராட்டி வருகிறார்கள்.
இதுகுறித்து நந்தா பிரஸ்டி பேசும்போது, “எங்கள் கிராமத்தில் கல்வியறிவற்றவர்கள் பலர் இருப்பதைக் கண்டேன். அவர்களுடைய பெயர்களைக் கூட எழுதத்தெரியாமல் இருக்கிறார்கள். கட்டை விரலால் கைநாட்டு வைப்பதையே தொடர்கிறார்கள்.
இது எனக்கு வேதனையைக் கொடுத்தது. ஊரில் படிக்காமல் யாரும் இருக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். இப்போது, அப்படி யாரும் இல்லை என்பதில் பெருமையாக உள்ளது. இப்போது, எனது மாணவர்களின் பேரக்குழந்தைகளுக்கு கறிப்பிக்கிறேன்” என்றுக் கூறி ஆச்சர்யப்படுத்துகிறார்.