“மசூத் அசாரை தடைசெய்யும் தீர்மானம்” - ஐநா கவுன்சிலில் பிரான்ஸ் முயற்சி

“மசூத் அசாரை தடைசெய்யும் தீர்மானம்” - ஐநா கவுன்சிலில் பிரான்ஸ் முயற்சி
“மசூத் அசாரை தடைசெய்யும் தீர்மானம்” - ஐநா கவுன்சிலில் பிரான்ஸ் முயற்சி
Published on

ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை தடைசெய்ய வேண்டிய நபராக அறிவிக்க வேண்டி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரானஸ் உட்பட பல உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட, பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்பின் பெயரை குறிப்பிட்டு ஒருமனதாக கண்டனத்தை பதிவு செய்திருந்தது. 

இதனையடுத்து பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியது. இந்திய விமானப்படையின் ‘மிராஜ் 2000’ ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பிறகு ஐநாவின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குடரெஸ், “இந்தியாவும் மற்றும் பாகிஸ்தானும் இந்தச் சம்பவம் போராக மாறாமல் பார்த்துகொள்ளவேண்டும்” எனக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் தடை செய்யப்பட்ட வேண்டிய நபராக அறிவிக்க வேண்டி பிரானஸ் தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினராக இருந்து வருகின்றன. அதன்படி இந்தப் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைபொறுப்பு மாதம் தோறும் ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்ப சுழற்சி அடிப்படையில் மாற்றி அமைக்கப்படும். அதன்படி வரும் மார்ச் மாத்திற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவி பிரான்ஸ் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.

அதனால் பிரான்ஸ் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியேற்றவுடன் மசூத் அசார் மீதான தடை தீர்மானத்தை இந்நாடு கொண்டுவரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தத் தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ‘1267 தடைகள் கமிட்டி’யின் முன் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்ஸ் நிரந்தர உறுப்பினர் நாடாக உள்ளதால் இந்தத் தீர்மானம் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கும் எனத் தெரிகிறது.

ஏற்கெனவே கடந்த 2017 ஆம் ஆண்டு மசூத் அசாரின் தடை தொடர்பாக தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இதனை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரான சீனா தனது தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துவந்தது. இதனிடையே நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா அதிகாரிகளை சந்தித்து பால்கோட் தாக்குதல்கள் பற்றி விளக்கம் அளித்துள்ளார். இதனால் மார்ச் மாதம் பிரான்ஸ் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரும் தீர்மானத்திற்கு சீனா எத்தகைய நிலைப்படை எடுக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com