எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. புல்வாமா தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் நேற்று பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் முகாம்களின் மீது குண்டு வீசியது. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் அனைத்து நடவடிக்கைக்கும் துணை நிற்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு உலக நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி ஆதாரத்தை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது.
மேலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ இருநாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண வேண்டும் எனவும் பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே பயங்கரவாதிகள் செயல்படுவது நேற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.