பிரான்ஸ் நாட்டில் ஒயின் உற்பத்தி ஆலைகள் சமீபத்திய காலங்களில் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றன. காரணம் அங்கு ஒயினுக்கான தேவை குறைந்து காணப்படுகிறது. பிரான்ஸில் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலேயே மது அருந்தும் பழக்கும் குறைந்துள்ளதாம். இதுகுறித்து ஐரோப்பிய கமிஷன் தரவு ஒன்றை வெளியிட்டது. கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின்படி, இத்தாலி (7%), ஸ்பெயின் (10%), பிரான்ஸ் (15%), ஜெர்மனி (22%), போர்ச்சுகல் (34%) உள்ளிட்ட நாடுகளில் மது அருந்தும் பழக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒயின் அருந்திவந்த பலரும் தற்போது பீர் விரும்பிகளாகியுள்ளனர் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பிரான்ஸில் தற்போது அளவுக்கு அதிகமாக ஒயின் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டதாம். இதனால் அங்கு ஒயின் உற்பத்தியினை நிறுத்தச் சொல்லி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் இந்த உத்தரவால் ஒயின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் முயற்சியாக கூடுதலாக உற்பத்தியான ஒயினை அழிக்க உதவுவதற்கு பிரான்ஸ் அரசு தானே முன்வந்துள்ளது. இதற்காக ரூ.1,782.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது பிரான்ஸ் அரசு.
இந்த நிதியை ஒயின் உற்பத்தியாளர்களிடம் கொடுத்து, அரசு ஒயினை பெற்றுக்கொள்ளும். பெறும் தொகை மூலம் ஒயின் உற்பத்தியாளர்கள் ஆலிவ் வளர்ப்பு உள்ளிட்ட மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்தப்படுவர். இப்படி செய்வதால் ஒயின் விலை சரிவு தடுக்கப்பட்டு, உற்பத்தியாளர்கள் மீண்டும் வருவாயை பெற முடியுமென சொல்லப்படுகிறது.
கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்ட ஒயினை வாங்கும் அரசு, அவற்றை அழித்து அதிலிருந்து பெறப்படும் ஆல்கஹாலை எடுத்து தூய்மைப்படுத்தும் பொருட்கள், சானிடைசர்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்க கொடுத்துவிடும் என சொல்லப்பட்டுள்ளது.