ரஷ்யாவுடனான ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஃபார்முலா ஒன் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் இனி எப்போதும் ரஷ்யாவில் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெறாது.
உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா ஒன் கார்பந்தயம் நடப்பது வழக்கம். உலக சாம்பியன்ஷிப் பட்டமான இதனைப் பெற, கார் பந்தய வீரர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுவர். தற்போது ரஷ்யா, உலகின் பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல்வேறு தடைகளை ரஷ்யா மீது விதித்து, தங்களது எதிர்ப்பை காட்டிவருகின்றன.
ஆனாலும் உக்ரைனை, கைப்பற்ற ரஷ்யா முனைப்புக் காட்டி வருகிறது. விளையாட்டுத் துறையிலும், இது எதிரொலிக்கவே செய்கின்றது. இந்தப் போரால் ரஷ்யாவை உள்ளடக்கிய விளையாட்டு நிகழ்வுகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவின் சோச்சியில் ஆண்டுதோறும் நடைபெறும் ரஷ்யன் கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் கார் பந்தயம், இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற இருந்தநிலையில் சில நாட்களுக்கு முன் ரத்துசெய்யப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவில் இனி எப்போதும் ரஷ்ய கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெறாது என்றும், அந்நாட்டுடனான ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக ஃபார்முலா ஒன் தெரிவித்துள்ளது. குறிப்பாக புதின் ஆட்சியில் இருக்கும் வரையாவது அங்கு ஃபார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பு மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கடுமையான தடைகளை விதித்துள்ளன. மேலும் பல நாடுகள், தங்கள் நாடுகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், ரஷ்யாவிற்கு சொந்தமான வணிக நிறுவனங்களுடன் வணிகம் செய்வதைத் தடைசெய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.