பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நலக் குறைவால் இன்று (பிப்.5) காலமானார். அவருக்கு வயது 79.
கடந்த 1964-ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரப், அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து அந்நாட்டின் ராணுவ தளபதியாக உயர் பதவி வகித்தார். பின்னர் நவாஸ் ஷெரிஃப் அரசை ராணுவ நடவடிக்கை வாயிலாக கவிழ்த்து, ராணுவ ஆட்சியை அமல்படுத்தினார் முஷாரப். கடந்த 1999-ல் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்த பின்னர் தலைமை நிர்வாகிப் பதவியை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 2001 முதல் 2008 வரை பாகிஸ்தானின் அதிபராக இருந்தார் முஷாரப்.
கார்கில் போருக்கு காரணமானவர் என குற்றம் சாட்டப்பட்ட முஷாரப், துபாயில் வசித்து வந்தார். 79 வயதான பர்வேஸ் முஷாரப் அமிலாய்டோசிஸ் (Amyloidosis) என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் அமிலாய்டு எனப்படும் அசாதாரண புரதத்தின் கட்டமைப்பால் ஏற்படும் அரிய நோயாகும். அமிலாய்டு புரதங்களின் உருவாக்கம் உறுப்புகள் மற்றும் திசுக்கள் சரியாக வேலை செய்வதை கடினமாக்கும்.
நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தநிலையில், துபாயில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானார் பர்வேஸ் முஷாரப். மருத்துவ சிகிச்சைக்காக, 2016-ல் துபாய் சென்றவர், அதன்பின் பாகிஸ்தான் திரும்பவில்லை. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் முஷாரப். சுதந்திர இந்தியாவின் விடுதலைக்கு முன்னர் 1943-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர் முஷாரப். நாடு பிரிவினைக்குப் பின்னர் பர்வேஸ் முஷாரப் குடும்பம், பாகிஸ்தானின் கராச்சிக்கு இடம்பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.