இலங்கை உடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டிற்குச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நிலவும் பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார். இதற்கிடையே பால், கோதுமை உள்ளிட்ட அத்யாவசியப்பொருட்களை வாங்க, இந்தியாவிடம் 7 ஆயிரத்து 600 கோடி ரூபாயை கடனாக இலங்கை கோரியுள்ளது.
பாதுகாப்பு, பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கை உடனான நல்லுறவு, இருநாடுகளுக்கும் அவசியமானது. அண்மையில் சீனாவுடன் இலங்கை அதிக நெருக்கம் காண்பித்து வந்த நிலையில், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என அரசியல் நோக்கர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியுள்ள இந்திய அரசு, கொரோனா தடுப்பூசி, எரிபொருள் என பல வகையில் உதவிசெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதித்துறை அமைச்சர் ஃபசில் ராஜபக்ஷ ஆகியோரையும் தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது இருநாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளைக் கொண்ட பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கைப் பயணம் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.