குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய ட்ரம்ப் நிர்வாகம் விதித்த தடை உத்தரவுக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிரியா, ஈரான், லிபியா, வடகொரியா, வெனிசுலா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதித்து கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு உலகெங்கிலும் இருந்து கண்டனங்கள் எழுந்தன. அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் போராட்டங்களும் நடந்தன. இது தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட போது, ட்ரம்ப் நிர்வாகம் விதித்த பயணத் தடை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று கூறப்பட்டது.
இந்தச் சூழலில் உச்சநீதிமன்றம் எத்தகைய தீர்ப்பினை வழங்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள், பயணத்தடைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தனர். தீர்ப்பு தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இது மாபெரும் வெற்றி என கூறியுள்ளார். நாட்டிற்கும் அரசியலமைப்புக்கும் கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உலக நாடுகள் மத்தியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.