உலகின் முன்னணி கால்பந்து தொடரான பிரிமியர் லீக்கில், அனைத்து அணி வீரர்களும் பெயர்களுக்கு பதிலாக BLACK LIVES MATTER என்று அச்சிடப்பட்ட ஜெர்ஸி அணிந்து விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் சிக்கி இருந்த அமெரிக்கா அதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டிக் கொதித்தது. அமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவர் தனது முட்டியால் கழுத்தை அழுத்தி ஜார்ஜ் பிளாய்டின் உயிரைப் பறித்தார். ''மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்'' என்று பிளாய்ட் அபயக்குரல் எழுப்பியும் அவரை அதிகாரி விடுவிக்கவில்லை. இந்தக் கொடூர கொலைக்கு நீதி வேண்டி அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் முழங்கால் இட்டு அமர்வதே நிறவெறிக்கு எதிரான செய்கை போல ஆகிவிட்டது.
இந்நிலையில், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் பங்கேற்கும் அணிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், கொரோனா தாக்கத்திற்கு பின், பிரிமியர் லீக் வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், வீரர்கள் தங்களது பெயர்களுக்கு பதிலாக BLACK LIVES MATTER என்ற வாசகத்தையும், நிறவெறிக்கு எதிரான இலட்சினையையும் கொண்ட ஜெர்ஸி அணிந்து விளையாடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.