சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க சாட்சியம் அளித்தார்.
சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 57 வயது பெண்ணான ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய் என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அன்று காலையில் நடைப்பயிற்சி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, வோங் ஜிங் ஃபோங் என்கிற நபர் விஷ்ணுபாயின் அருகில் வந்து, 'ஏன் நீங்கள் முகக்கவசம் அணியவில்லை' என்று கேட்டதுடன், இனவெறியுடன் அவதூறாகப் பேசி அப்பெண்ணின் மார்பில் எட்டி உதைத்து தாக்கியுள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அந்நேரத்தில் சர்ச்சையாகி பெரும் பூதாகரமாக வெடித்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட வோங் ஜிங் ஃபோங் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை வோங் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஹிந்தோச்சா நிதா விஷ்ணுபாய் முதல்முறையாக நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜாராகி தனக்கு நேர்ந்த சம்பவத்தை விளக்கிக் கூறினார். வோங் ஜிங் ஃபோங் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி, பின்னர் நெஞ்சில் காலால் எட்டி உதைத்ததாக நீதிபதி முன்னிலையில் தழுதழுத்த குரலில் சாட்சி அளித்தார். ஆசுவாசப்படுத்தி விட்டு பேசுமாறு நீதிபதி கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, விஷ்ணுபாய் நீதிமன்ற வளாகத்துக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் ஆஜாராகிப் பேசினார். “அந்தச் சம்பவம் என்னை மனரீதியாக பாதித்துள்ளது. அது எனக்கு கவலையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்திருக்க வேண்டாம் என்றுதான் நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி இவ்வழக்கின் விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
சிங்கப்பூர் சட்டத்திட்டங்களின்படி எந்தவொரு நபரின் மத அல்லது இன உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் நோக்கில் பேசுவது/நடந்து கொள்வது நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.