மனிதன் எவ்வளவுதான் உழைத்தாலும் அவனுக்கு ஓய்வு என்பது அவசியமாகிறது. அந்த ஓய்வை அவன் உறக்கத்தின்மூலம் நிறைவேற்றிக் கொள்கிறான். ஆயினும் அந்த உறக்கத்தின்போது இடையூறுகள் ஏற்பட்டால் அவனால் நிம்மதியாக உறங்க முடியாது. உதாரணத்திற்கு உறக்கத்தின்போது அதிக சத்தமோ, குறட்டை ஒலியோ அல்லது வேறு ஏதாவது செயல்கள் நடந்தாலோ அவனால் நிம்மதியாக உறங்க முடியாது.
அந்த வகையில், அமெரிக்க மக்களின் உறக்கத்தை மீன்களின் இனப்பெருக்க சத்தம் கெடுத்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில்தான் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் ஒரு மர்ம சத்தம் தொடர்ந்து கேட்டப்படியே இருந்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் யாரும் நிம்மதியாக உறங்க முடியாமல் தவித்துள்ளனர்.
இதையும் படிக்க: தேர்தல் பத்திர விற்பனை: அதிக நிதியைத் தட்டித் தூக்கிய பாஜக! 9.5% பெற்ற காங்கிரஸ்!
இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது எனக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்த அப்பகுதி மக்கள், ஆளுக்கொரு காரணத்தைக் கூறியபடியே இருந்துள்ளனர். ஆயினும், அந்தச் சத்தம் தொடர்ந்துகொண்டிருக்கவே பதற்றத்திற்குள்ளான அப்பகுதி மக்கள், உள்ளூர் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்நிர்வாகம் ஆய்வாளர்களை நியமித்து ஆய்வு செய்துள்ளனர். அப்போது டாக்டர் ஜேம்ஸ் லோகாசியோ என்ற விஞ்ஞானி, ’பிளாக் டிரம் மீன் இனச்சேர்க்கையின்போது வெளிப்படும் ஒலியாக இருக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் குளிர்காலத்தில் இரவுநேரங்களில் மிகவும் சுதந்திரமாக இருக்கக்கூடிய மீன் வகைகளில் ஒன்று, பிளாக் டிரம். இந்த மீன்கள்தான் குளிர்காலத்தில் அதிக இனச்சேர்க்கையில் ஈடுபடுமாம். அப்போது ஏற்படும் இந்தச் சத்தம் 165 டெசிபல் வரை இருக்குமாம். இந்தச் சத்தம்தான் அப்பகுதி மக்களை உறங்கவிடாமல் இடையூறு செய்வதாகக் கூறப்படுகிறது. எனினும், இதற்குப் பின்னால் உள்ள சரியான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில், இந்தச் சத்தத்தை உறுதிசெய்யும் வகையில் அப்பகுதியில் மைக்குகளை ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர்.
பிளாக் டிரம் என்ற இந்த மீன் பொதுவாக வடஅமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மற்றும் மேற்கு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அதிகம் காணப்படுவதாகவும், இவை பொதுவாக 2-14 கிலோ வரை வளரக்கூடியவை எனவும், இந்த வகை மீன்கள் கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதேபோன்று, இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள மட்டக்களப்பில் கல்லடி வாவிப் பகுதியில் ’பாடும் மீன்’ இனங்கள் வாழ்வதாகக் கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் வாவியின் அடிப் பரப்பில் ஆயிரக்கணக்கான மீன்கள் ஒன்றுகூடி இச்சத்தத்தை உருவாக்குவதாகக் கூறுகின்றனர்.