அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ப்ளோரிடா மாகாணத்தின் பார்க்லேண்ட் பகுதியில் உள்ள ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த காவல்துறையினர் மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் ஸ்டோன்மேன் டக்லஸ் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனிடையே இது தொடர்பாக ஃப்ளோரிடா மாகாணா ஆளுநரை தொடர்பு கொண்ட அதிபர் ட்ரம்ப், சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை கேட்டுள்ளார். மேலும், பள்ளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அதிபர் ட்ரம்ப் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பள்ளிகளில் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி, அதில் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.