2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (ஏப்ரல் 30) தோன்றுகிறது. இந்த சூரிய கிரகணம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இதோ...
இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று உலகின் பல பகுதிகளில் தெரியவுள்ளது. சூரிய கிரகணம் என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் ஒரு நிகழ்வாகும், இது ஒரு சில பகுதிகளில் சூரிய ஒளியைத் தடுக்கிறது. பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும் இன்றைய கிரகணம் இந்திய நேரப்படி மே 01, 2022 அன்று நள்ளிரவு 12:15 மணிக்கு தொடங்கி அதிகாலை 04:07 மணிக்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூரிய கிரகணத்தை தென் அமெரிக்கா, சிலி, உருகுவே, தென்மேற்கு பொலிவியா, பெரு, தென்மேற்கு பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவின் குறிப்பிட்ட பகுதிகளில் பார்க்கலாம் என்பதை நாசா உறுதி செய்துள்ளது.
இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்த கிரகணம் தோன்றுவதால் இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் நாசாவின் ஆர்த்தோகிராஃபிக் வரைபடத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங், கூகுள் வரைபடம் மற்றும் நாசா அனிமேஷன் ஆகியவற்றின் மூலமும், இணையதளம் மூலமும் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் வரும் மே 16 ஆம் தேதி சந்திர கிரகணமும், அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணமும், நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணமும் நிகழவுள்ளது.